இஸ்ரேலுக்கு சண்டை செய்யும் இந்தியர்களின் திடுக் பின்னணி | Who is Bnei Menashe | Israel vs Hamas
இஸ்ரேலுக்கு சண்டை செய்யும் இந்தியர்களின் திடுக் பின்னணி | Who is Bnei Menashe | Israel vs Hamas இஸ்ரேல், பாலஸ்தீன் போர் 11 மாதங்களுக்கும் மேலாக நடக்கிறது. இஸ்ரேல் தரப்பில் இதுவரை 1200க்கும் மேற்பட்ட மரணங்கள் நேர்ந்துள்ளன. பாலஸ்தீன் தரப்பில் 40 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேல் படையில் இருந்த இந்தியாவை சேர்ந்த இளைஞர் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொல்லப்பட்ட இந்தியரை போல் இன்னும் 300 இந்தியர்கள் இஸ்ரேலுக்காக சண்டை போட்டுக்கொண்டு இருக்கின்றனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்தியாவை சேர்ந்த வீரர் எப்படி கொல்லப்பட்டார்? போரில் சண்டை செய்யும் மற்ற இந்தியர்கள் யார்? என்பதை பார்க்கலாம். இஸ்ரேல் போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதியில் மேற்கு கரையும் ஒன்று. அங்கு இஸ்ரேல் படையினர் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். பீட் எல் என்ற குடியிருப்பில் நின்றிருந்த இஸ்ரேல் வீரர்களை நோக்கி மின்னல் வேகத்தில் ஒரு டிரக் வந்தது. அப்படியே வீரர்கள் கூட்டத்தில் பாய்ந்தது. அதில் ஜெரி கிதியோன் ஹங்கல் என்ற 24 வயதான வீரர் கொல்லப்பட்டார். அவர் மீது மோதிய டிரக்கில் பாலஸ்தீன் பதிவெண் இருந்தது. அதை ஓட்டிய நபரை பிடித்து இஸ்ரேல் ராணுவம் விசாரித்து வருகிறது. கொல்லப்பட்ட ஜெரி கிதியோன் இந்தியாவை சேர்ந்தவர். மணிப்பூர் தான் சொந்த ஊர். அவர் பினெய் மெனாசே என்ற பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர். 2020ம் ஆண்டில் இவர் இந்தியாவில் இருந்து சென்று இஸ்ரேலில் குடியேறினார். இஸ்ரேல் ராணுவத்தில் கஃபிர் பட்டாலியன் படையில் சேர்ந்தார். போர் துவங்கியதில் இருந்து ஹமாசை எதிர்த்து சண்டை செய்து வந்தார். இஸ்ரேல் படையில் இறந்த முதல் இந்தியர் இவர் தான் என்று சொல்லப்படுகிது. இவரை போல் இன்னும் 300 இந்தியர்கள் இஸ்ரேல் படையில் இருக்கின்றனராம். அனைவரும் இந்தியாவின் மணிப்பூர் மற்றும் மிசோரமை சேர்ந்த பினெய் மெனாசே பழங்குடி சமூகத்தை சேர்ந்வர்கள் தான். பினெய் மெனாசே பழங்குடியினர் இஸ்ரேலுக்காக சண்டை செய்வதற்கும் ஒரு பின்னணி இருக்கிறது. பைபிள் படி யூதா, சிமியோன், பென்யமின், ரூபன், மனாசே, காத் உட்பட 12 பேர் இஸ்ரவேலின் சந்ததியினர். இவர்களது வழி வந்தவர்கள் 12 ஜாதிகளாக மாறினர். அப்படி யூதாவின் சந்ததியில் வந்தவர்கள் தான் யூதர்கள். பிற்காலத்தில் 12 ஜாதியினருமே யூதர்கள் என்று பொதுவாக அழைக்கப்பட்டனர். இந்த 12 ஜாதியில் ஒரு ஜாதியான மனாசே ஜாதியின் வழி வந்தவர்கள் தான் தாங்கள் என்று இந்தியாவின் மணிப்பூர், மிசோரோமில் வசிக்கும் இந்திய யூதர்களான பினெய் மெனாசே சமூக மக்கள் சொல்ல ஆரம்பித்தனர். அடிப்படையில் இவர்கள் அனைவருமே குகி, மிசோஸ் சமூகத்தில் இருந்து பிரிந்து வந்தவர்கள். மனாசே வழித்தோன்றல் என்று உறுதியாக கூறி, பின்னர் பினெய் மெனாசே என்ற ஜாதியாக உருவெடுத்தனர். மணிப்பூர், மிசோரோமில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் இருந்தனர். 2005ம் ஆண்டுக்கு பிறகு இவர்களில் பாதி பேர் இஸ்ரேலுக்கு குடி பெயர்ந்தனர். அவர்கள் அதிகாரப்பூர்வமாக குடிப்பெயர இந்திய அரசும், அவர்களுக்கு குடியுரிமை வழங்க இஸ்ரேல் அரசும் முன் வந்தன. அதன்படி இதுவரை பினெய் மெனாசே ஜாதியினர் 5 ஆயிரம் பேர் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்து விட்டனர். இதில் கடைசி 5 ஆண்டில் மட்டும் 1,500 பேர் இஸ்ரேல் சென்றுள்ளனர். மற்றவர்களும் இஸ்ரேல் செல்ல காத்திருக்கின்றனர். ஏற்கனவே சென்ற 5 ஆயிரம் பினெய் மெனாசே ஜாதியினரில் தான் 300 பேர் இப்போது இஸ்ரேல் ராணுவத்தில் போர் வீரர்களாக வலம் வருகின்றனர்.