செப்டம்பர் இறுதி வரை வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு! Climate Change | Monsoon | Tamilnadu
செப்டம்பர் இறுதி வரை வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு! Climate Change | Monsoon | Tamilnadu தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது. இதனால் ஏற்பட்ட குளிர்ந்த காலநிலை மக்களுக்கு இதமாக அமைந்தது. அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கும் வரை, இதே இதமான சூழல் நிலவும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதை பொய்யாக்கும் வகையில், தற்போது தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் அக்னி நட்சத்திர காலம் போன்று, 100 டிகிரி பாரன்ஹீட்க்கு மேலாக வெயில் பதிவாகிறது. இதனால், பகல் நேரத்தில் அனல் காற்றின் தாக்கத்தை மக்கள் உணர்கின்றனர். இரண்டாவது கோடை காலமோ என்று நினைக்கும் அளவுக்கு, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர். இதுகுறித்து, வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவது: பொதுவாக, புரட்டாசி மாதத்தில் சூரியனின் கதிர்கள், நிலநடுக்கோட்டை ஒட்டிய பகுதிகளில், அதிக நேரம் நேரடியாக படுவது வழக்கம். இவ்வாறு நேரடியாக சூரிய கதிர்கள் படும் சமயத்தில் கடலிலும், நிலப்பகுதியிலும் வெப்பநிலை அதிகரிக்கும். இந்த சமயத்தில், கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக இருக்கும் போது, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசினால், வெப்பத்தின் தாக்கம் குறையும். ஆனால், தற்போது தென்மேற்கு பருவக்காற்று வடக்கு நோக்கி வீசுவதால், தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் வலுவடைந்து, பருவ மழையை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால், தெற்கில் இருந்து குளிர்காற்று வடக்கு நோக்கி சென்று விடுகிறது. இதே சமயத்தில் கடற்காற்று வருவதும் குறைந்துள்ளதால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, கடிகார சுற்றுக்கு எதிராக வீசுவதால் வெப்பநிலை அதிகரிக்கிறது. பருவக்காற்றில் மாற்றங்கள் ஏற்படாத நிலையில், செப்டம்பர் இறுதி வரை இந்த சூழல் நீடிக்க வாய்ப்புள்ளது, என வானிலை ஆய்வாளர்கள் கூறினார்.