அன்னபூர்ணாவின் இருவேறு கிரீம் பன் பில்லால் சர்ச்சை | Hotel | Annapurna | Cream bun | GST difference
கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நடந்த கலந்துரையாடலில் அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனர் ஸ்ரீனிவாசன் கிரீம் பன் ஜிஎஸ்டி பற்றி பேசியது சர்ச்சையானது. அடுத்த நாளே அவர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை கூட்டியது. பல தரப்பிலும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், பாஜவுக்கும் எதிராக கண்டனங்கள் எழுந்தன. ஸ்ரீனிவாசன் தாமாக முன்வந்தே மன்னிப்பு கேட்டதாக பாஜ தரப்பில் விளக்கம் அளித்தனர். ஆனாலும் அன்னபூர்ணா கிரீம் பன் ஜி.எஸ்.டி விவகாரம் அவ்வளவு எளிதில் ஓய்வதாக இல்லை. அன்னபூர்ணா நிர்வாகமே, இத்துடன் முடித்துக்கொள்வோம் என்று சொன்னாலும் சோசியல் மீடியாக்களில் சர்ச்சை தொடர்கிறது. கோவையை சேர்ந்த ஒருவர், அன்னபூர்ணாவில் கிரீம் பன் வாங்கி, ஜி.எஸ்.டி 18 சதவீதம் இல்லை. 5 சதவீதம்தான் போட்ருக்காங்க என, பில்லுடன் வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார். அதேசமயம், அன்னபூர்ணாவில் கிரீம் பன்னுக்கு 18 சதவீதம்தான் ஜி.எஸ்.டி என மற்றுமொரு அசல் பில்லும் பரப்பப்படுகிறது. இரண்டு பில்லும் ஒரே கிளையில் வாங்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி பதிவு எண், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எண்களும் ஒன்றுதான். ஜி.எஸ்.டிக்கான ஹெச்.எஸ்.என். கோடும் ஒரே மாதிரியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஜி.எஸ்.டி வரி விகிதம் மட்டும் 5, 18 என வெவ்வேறாக உள்ளது.