உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிரம்ப் உயிருக்கு ஏன் இவ்வளவு ஆபத்து? | Donald Trump shooting | Ryan Wesley Routh | Trump vs Kamala

டிரம்ப் உயிருக்கு ஏன் இவ்வளவு ஆபத்து? | Donald Trump shooting | Ryan Wesley Routh | Trump vs Kamala

டிரம்ப் உயிருக்கு ஏன் இவ்வளவு ஆபத்து? | Donald Trump shooting | Ryan Wesley Routh | Trump vs Kamala நவம்பர் 5ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் மீது 2வது முறையாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவனை அதிரடியாக துரத்தி சென்று போலீசார் கைது செய்தனர். அவன் பிடிபட்டது எப்படி? டிரம்பை கொலை செய்ய முயன்றதன் பின்னணி இப்போது வெளியாகி அதிர வைத்துள்ளது. அதிபர் வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் டிரம்ப்புக்கு அமெரிக்காவில் மூன்று இடத்தில் சொந்தமாக கோல்ப் மைதானம் உள்ளது. தினமும் இதில் ஏதாவது ஒரு மைதானத்தில் டிரம்ப் விளையாடுவது வழக்கம். அதன்படி ஃப்ளோரிடா கோல்ப் மைதானத்தில் டிரம்ப் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது மைதானத்தின் காம்பவுன்ட் வேலி பகுதியில் இருந்து ஒரு ஆசாமி டிரம்பை குறி பார்த்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். அதிர்ஷ்டவசமாக டிரம்ப் உயிர் தப்பினார். மைதானத்தில் இருந்த டிரம்பின் பாதுகாவலர்கள் துப்பாக்கி குண்டு வந்த திசையில் பார்த்தனர். அங்கு துப்பாக்கியுடன் ஆசாமி இருப்பதை கண்டனர். அவனை நோக்கி சரமாரியாக சுட்டனர். சுதாரித்த ஆசாமி துப்பாக்கி மற்றும் உடமைகளை போட்டு விட்டு வேக, வேகமாக தனது காரில் ஏறி தப்பினான். உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்பாட்டில் மர்ம நபரையும், அவன் தப்பி சென்ற காரையும் ஒருத்தர் போட்டோ எடுத்திருந்தார். அதில் ஆசாமியின் முகம், காரின் பதிவு எண் பதிவாகி இருந்தது. அதை துருப்புச்சீட்டாக வைத்து எல்லா சிக்னல், செக்போஸ்ட்டில் இருக்கும் போலீசாருக்கும் அலர்ட் கொடுத்தனர். கார் செல்லும் திசையை நோக்கி போலீசார் துரத்தி சென்றனர். சிறிது நேரத்தில் ஆசாமியின் காரை சுற்றி வளைத்தனர். அவனை கைது செய்து விசாரித்தனர். அவன் 58 வயதான ரியான் வெஸ்லி ரூத் என்பது தெரியவந்தது. ஸ்பாட்டில் அவன் விட்டு சென்ற உடமைகளையும் போலீசார் கைப்பற்றினர். அதில் ஏகே 47 ஸ்டைல் ரைபிள் ஒன்றும், இலக்கை குறி வைப்பதற்கான ஸ்கோப் ஒன்றும் கிடைத்தது. இவை தவிர 2 பேக்கும், ஒரு gopro கேமராவும் அந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது. டிரம்பை நோக்கி மொத்தம் 4 ரவுண்ட் சுட்டு இருக்கிறான் ரியான் வெஸ்லி. கிட்டத்தட்ட 400 மீட்டர் தூரத்தில் இருந்து தாக்குதல் நடத்தி இருக்கிறான். அந்த நேரத்தில் டிரம்பை துல்லியமாக குறி வைப்பதற்கு ஏற்ப சாதகமான வானிலை இல்லை. இதனால் சகட்டு மேனிக்கு தோட்டாக்கள் பறந்து இருக்கின்றன. டிரம்ப்பும் உயிர் தப்பி இருக்கிறார் என்று போலீசார் கூறினர். இதற்கிடையே கைதான ரியான் வெஸ்லி பற்றி திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின. அவன் வடக்கு கரோலினாவை சேர்ந்தவன். ஜனநாயக கட்சியின் தீவிர ஆதரவாளனாகவும் டிரம்பின் எதிர்ப்பாளனாகவும் இருந்து இருக்கிறான். ரஷ்யா போரில் உக்ரைனுக்கு ஆதாரவாக பல பிரசாரங்களை செய்திருக்கிறான். ரஷ்யா போரை துவங்கியதும் அவசர அவசரமாக உக்ரைனுக்கும் சென்று இருக்கிறான் ரியான் வெஸ்ல்லி. கீவ் நகரில் ரஷ்ய படைக்கு எதிராக களம் இறங்கி, உக்ரைன் மக்களை திரட்டினான். போரில் சண்டை செய்ய உக்ரைன் படையில் மக்களை சேர்த்து விட்டான். இது பற்றி அங்கு பரபரப்பு பேட்டியும் கொடுத்து இருக்கிறான். உக்ரைனுக்கு ஆதரவாக சண்டை செய்ய நான் கீவ் நகருக்கு வந்துள்ளேன். மக்களை ரஷ்யாவுக்கு எதிராக போர் செய்ய தயார் செய்வேன் சன்று அவன் கூறி இருந்தான். முன்பு, தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி என மாறி மாறி ஆதரவு தெரிவித்து வந்து இருக்கிறான். டிரம்ப் அதிபர் ஆன பிறகு அவரை சாடினான். நீங்கள் நாட்டுக்கு நல்லது செய்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால் இப்படி சீரழித்து விட்டீர்களே. நீங்கள் போனால் சந்தோஷப்படுவேன் என்று முன்பு கூறி இருந்தான். சமீப காலமாக ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளான். ஜனநாயகம் ஓட்டு சீட்டில் தான் உள்ளது. அதை தோற்க விடமாட்டோம் என்று பதிவிட்டுள்ளான். இது பைடன், கமலா அடிக்கடி சொல்லும் முழக்கம். அதே போல், அமெரிக்காவின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதில் பைடன் முனைப்பு காட்ட வேண்டும். முதலாளிகளின் கீழ் அமெரிக்காவை அடிமைப்படுத்த டிரம்ப் முயற்சி செய்கிறார். நாம் விட்டு விடக்கூடாது என்றும் ரியான் வெஸ்லி கூறி இருக்கிறான். தன் மீது துப்பாக்கிச்சூடு நடந்ததும், அது பற்றி கட்சியினருக்கு டிரம்ப் கடிதம் எழுதினார். என்னை சுற்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. நான் பாதுகாப்பாகவும் நலமுடனும் இருக்கிறேன். என்னை எந்த செயலும் தடுக்க முடியாது. நான் ஒரு போதும் சரண் அடையமாட்டேன் என்று டிரம்ப் கூறினார். ஆனால், டிரம்பை ரியான் வெஸ்லி சுட்டதன் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை என்று அதிபர் பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிசும் கூறி உள்ளனர். நான் ஏற்கனவே கூறியது போல் அமெரிக்காவில் அரசியல் வன்முறைக்கு இடம் இல்லை. நடந்த சம்பவம் பற்றி தீவிர விசாரணை நடக்கிறது. முன்னாள் அதிபரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எல்லா பாதுகாப்பு அமைப்புகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்று பைடன் கூறினார். டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச்சூடு பற்றி தனக்கு அதிகாரிகள் விளக்கினர் என்று துணை அதிபரும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் சொன்னார். டிரம்ப் நலமுடனும் பாதுகாப்புடனும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் கூறினார். ரியான் வெஸ்லியின் மகன் ஓரன் ரூத், தனது அப்பா இந்த சம்பவத்தை செய்திருக்க வாய்பே இல்லை என்று கூறினான். எனது அப்பா அன்பானவர்; நேர்மையானவர். கடுமையான உழைப்பாளி. ஃப்ளோரிடாவில் உண்மையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இந்த காரியத்தை என் அப்பா தான் செய்திருப்பார் என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை. நான் பார்த்து வியந்த அப்பாவை, வன்முறையாளனாக என்னால் கருத முடியவில்லை. அவர் நல்ல மனிதர் என்று ஓரன் ரூத் சொன்னான். டிரம்ப் மீது நடந்த தாக்குதல் பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 2 மாதம் முன்பு தான் பென்சில்வேனியாவில் வைத்து டிரம்ப் சுடப்பட்டார். தனது ஆதரவாளர்கள் முன்பு பொதுக்கூட்டத்தில் பேசிய போது அவரை ஆசாமி சுட்டான். அப்போது, அவரது காதை குண்டு துளைத்தது. மறுநொடி ஆசாமியை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுப்பொசுக்கினர். அதிர்ஷ்டவசமாக நூலிழையில் டிரம்ப் உயிர் தப்பினார். இப்போது 2வது முறையாக உயிர் தப்பி இருக்கிறார். முதல் துப்பாக்கிச்சூடுக்கு பிறகு டிரம்ப்புக்கு பல மடங்கு ஆதரவு பெருகியது. இப்போதும் டிரம்ப்புக்கு ஆதரவாக சோசியல் மீடியாவில் பதிவுகள் தெறிக்கின்றன. தேர்தலுக்கு 50 நாட்களே இருக்கும் நிலையில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும் என்கின்றனர் குடியரசு கட்சியினர்.

செப் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி