உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவை குழந்தை நல காப்பகங்களில் நடப்பது என்ன? Child Care Centers | Business | Coimbatore

கோவை குழந்தை நல காப்பகங்களில் நடப்பது என்ன? Child Care Centers | Business | Coimbatore

கோவை குழந்தை நல காப்பகங்களில் நடப்பது என்ன? Child Care Centers | Business | Coimbatore கோவை மாவட்டத்தில், 45 குழந்தைகள் காப்பகங்கள் செயல்படுகின்றன. அங்கு பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றன. மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட வேண்டிய இந்த காப்பகங்களுக்கு, ஸ்பான்சர்கள் அதிகம் கிடைப்பதால் வருமானம் ஈட்டும் தொழிலாக மாறி வருவது வேதனையை ஏற்படுத்துகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக குழந்தைகளை காப்பகங்களில் வைத்து அவர்கள் வாயிலாக வருமானம் பார்த்து வருகின்றனர். இதனைத் தடுக்க வேண்டிய குழந்தைகள் நல அலுவலகமும் கண்டு கொள்வதில்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத குழந்தைகள் நல குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: காப்பகங்களைப் பொறுத்தவரை, 20 குழந்தைகளுக்கு ஒரு கழிப்பறை, அருகில் பள்ளி, அந்த பள்ளியில் உளவியல் நிபுணர், 24 மணி நேரமும் இருக்க கூடிய வார்டன் மற்றும் காவலாளி இருக்க வேண்டும். பெரும்பாலான காப்பகங்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றுவது இல்லை. தமிழகத்தில் உள்ள காப்பகங்களில் அதிக ஸ்பான்சர் கிடைப்பது கோவையில்தான். அதனால் காப்பகங்களை வருமானம் ஈட்டும் தொழிலாக பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமான குழந்தைகளை தங்க வைப்பது, பெண் குழந்தைகள் மட்டும் தங்க வைக்க வேண்டிய இடங்களில் ஆண் குழந்தைகளையும் சேர்த்து தங்க வைப்பது, காப்பகங்களின் அருகில் வசிக்கும் ஏழைப் பெற்றோரிடம் குழந்தைகளை நல்லபடியாக பார்த்துக் கொள்வதாகக் கூறி, அந்தக் குழந்தைகளையும் வரவழைத்து தங்க வைப்பது போன்ற விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். காப்பகங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குழந்தைகள் நல அலுவலகத்துக்கு உள்ளது. 12க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஆய்வு மேற்கொள்ள தனி வாகனம் இருந்தும் அவர்கள் எதையும் கண்டு கொள்வதில்லை. அதேசமயம், குழந்தைகள் நல குழு எந்த ஒரு வசதியும் இல்லாமல் அவ்வப்போது குழந்தைகள் காப்பகங்களை ஆய்வு செய்து வருகிறோம். அப்படி நடத்தப்பட்ட ஆய்வில், மாதம்பட்டி, சிங்காநல்லுார், வடவள்ளியில் இரு காப்பகங்கள் என, 4 காப்பகங்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்ததை கண்டுபிடித்தோம். போலீசார் உதவியுடன் அங்கிருந்த குழந்தைகளை மீட்டு மற்ற காப்பகங்களில் பத்திரமாக ஒப்படைத்தோம். அதேபோல சில காப்பகங்களில் உணவுப் பொருட்களை ஆய்வு செய்தபோது, காலாவதியான உணவு பொருட்களை வைத்திருந்தனர். காலாவதியான பொருட்கள் எனத் தெரிந்தும், அதையே குழந்தைகளுக்கு உண்பதற்குக் கொடுத்து வந்துள்ளனர். காரமடை, வெள்ளலூர், சோமனுார், வடவள்ளி, மாதம்பட்டி போன்ற இடங்களில், 6 காப்பகங்கள், விடுதி என பெயர் மாற்றி குழந்தைகளைப் பராமரித்து வருகின்றன. சில காப்பகங்களில், சமையல் செய்வதற்கு, அங்குள்ள குழந்தைகளையே வேலை வாங்குகின்றனர். வேறு வேலைகளையும் செய்யச் சொல்கின்றனர். ஒரு காப்பகத்தில் குழந்தை எங்கிருந்து வந்தது என்ற விவரம் கூட இல்லை. கோவை மாவட்டத்தில் உள்ள, 45 காப்பகங்களில், 20க்கும் மேற்பட்ட காப்பகங்கள் ஆள் நடமாட்டம் இல்லாத, இடங்களில் உள்ளன. குழந்தைகள் நல குழு ஆய்வு செய்யச் செல்லும் தகவலை முன்கூட்டியே அறிந்து விடுகின்றனர். அப்போது குழந்தைகளை தண்ணீர் தொட்டியிலும், மொட்டை மாடியிலும் மறைத்து வைக்கிறார்கள். குழந்தைகள் படும் கஷ்டங்களை துளியும் காப்பகம் நடத்துபவர்கள் கண்டு கொள்வது இல்லை. குழந்தைகளுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன் இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குழந்தைகள் நல குழு உறுப்பினர் கூறினார். ----

அக் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை