உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரேலை அழிக்க ஈரான் செய்த செயல்-திடுக் தகவல் | Israel vs Hezbollah

இஸ்ரேலை அழிக்க ஈரான் செய்த செயல்-திடுக் தகவல் | Israel vs Hezbollah

இஸ்ரேலை அழிக்க ஈரான் செய்த செயல்-திடுக் தகவல் | Israel vs Hezbollah | Israel vs Iran | Iron attack plan லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புலா பயங்கரவாதிகளை குறி வைத்து 4 வாரமாக இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சண்டையின் உச்சமாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பதுங்கி இருந்த ஹெஸ்புலா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் குண்டு வீசி கொன்றது. நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டதும் பல முஸ்லிம் அமைப்புகள் கொந்தளித்தன. ஈரானால் நஸ்ரல்லா இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க அந்நாட்டின் மீது 201 பாலிஸ்டிக் ஏவுகணை குண்டுகளை கடந்த வாரம் ஈரான் வீசியது. இஸ்ரேலின் வான்படை, மொசாட் உளவு அமைப்பின் தலைமை அலுவலகத்தை குறிவைத்து தாக்கியதாக ஈரான் சொன்னது. அதே நேரம் பெரும்பாலான ஏவுகணைகளை இடைமறித்து வானிலே அழித்து விட்டோம் என்றது இஸ்ரேல். இருப்பினும் ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. இஸ்ரேல் மேல் குண்டு போட்டது மிகப்பெரிய பிழை. ஈரான் உரிய விலையை கொடுத்தே ஆகும் என்று ஆவேசம் காட்டினார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. ஈரானில் உள்ள அணு உற்பத்தி மையங்கள், எண்ணெய் கிடங்குகளை தான் இஸ்ரேல் குறி வைக்கும் என்று உலக நாடுகள் அச்சம் தெரிவித்தன. அந்த மாதிரி எந்த தாக்குதலும் வேண்டாம் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. இந்த நிலையில் ஈரானின் எண்ணெய் கிடங்குகள், ஈரான் நாட்டின் உயர் மட்ட தலைவர்கள், உளவு அமைப்புகளை இஸ்ரேல் குறி வைப்பது இப்போது தெரியவந்துள்ளது. ஒரு வேளை தங்கள் பதிலடிக்கு ஈரான் மீண்டும் திருப்பி அடித்தால் அப்போது அணு உற்பத்தி மையங்கள் மீது கை வைக்கலாம் என்று இஸ்ரேல் கணக்கு போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே புயலை கிளம்பும் சம்பவம் ஒன்றை ஈரான் செய்திருக்கிறது. அதாவது, அக்டோபர் 5ம் தேதி ஈரானின் செம்னான் மாகாணம் அராடன் கவுண்டியில் உள்ள பாலைவனத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 12 கிலோ மீட்டர் தூரத்தில் நடந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது. அந்த நிலநடுக்கம் தான் உலக அரசியலில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு காரணம். ஈரானில் ஏற்பட்டது உண்மையிலேயே இயற்கையான நிலநடுக்கம் அல்ல. அது பூமிக்கடியில் ஈரான் நடத்திய அணு ஆயுத சோதனையின் விளைவு என்று பல நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இத்தனைக்கும் அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் ஈரான் இல்லை. அப்படி இருக்க இப்போது கிளம்பி இருக்கும் சந்தேகம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரானில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில நாட்கள் முன்பு தான் இஸ்ரேல் மீது 201 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் ராணுவம் வீசியது. இதற்கு உரிய பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் கூறியதால், அதை எதிர்கொள்ளும் விதமாகவே இந்த அணு ஆயுத சோதனையை ஈரான் நடத்தியதாக சொல்லப்படுகிறது. ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் தீவிரம் காட்டி வருவதாக ஏற்கனவே அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் சொல்லி வந்தன. ஈரானும் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வந்தது. ஒரு அணு ஆயுதத்தை தயாரிக்க தேவையான யுரேனியம் அளவில் 90 சதவீதத்தை ஈரான் செறிவூட்டி விட்டது என்று முன்பே செய்திகள் வெளியாகின. அதன் தொடர்ச்சியாக அணு ஆயுதங்களை ஈரான் தயாரித்து இருக்கலாம். அதில் ஒன்றை பூமிக்கடியில் 12 கிலோ மீட்டர் தூரத்தில் வெடிக்க செய்திருக்கலாம். அதன் விளைவாகவே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறி உள்ளனர். அதே நேரம் வேறு ஒரு நாட்டிடம் இருந்து அணு ஆயுதங்களை ஈரான் வாங்கி சோதனை நடத்தி இருக்கலாம் என்ற பேச்சும் உள்ளது. இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கையும் விடுத்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அதற்கான கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறி உள்ளது. எப்படியும் ஈரான் மீது இஸ்ரேல் குண்டு வீசுவது உறுதியாகி விட்டது. அப்படி வீசினால் ஈரானின் அடுத்த நகர்வு என்ன? என்பது தான் இப்போது புதிய கவலையாக உருவெடுத்து இருக்கிறது.

அக் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை