ஜம்மு-காஷ்மீரில் யாருக்கு எத்தனை சீட்? முழுவிவரம் JK Election Results
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கு எத்தனை சீட்? முழுவிவரம் JK Election Results| Jammu Kashmir election 2024| BJP| JKNC| PDP| Congress ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி தேசிய மாநாட்டு கட்சி 39 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜ 27 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன், 2 முன்னிலை வகிக்கிறது. பிடிபி 3 இடங்களில் வென்றுள்ளது. சுயேச்சைகள் 7 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. ஆம் ஆத்மி ஒரு இடத்திலும், ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஜம்மு கிழக்கு, மேற்கு, வடக்கு தொகுதிகள், உதம்பூர் மேற்கு, உதம்பூர் கிழக்கு, ஸ்ரீமாதா வைஷ்ணோதேவி, கிஷ்துவார், டோடா மேற்கு, ரியாசி, அக்னுார், சம்பா, ஹிராநகர் உட்பட ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான இடங்களை பாஜ அப்படியே அள்ளியது. உரி, பாரமுல்லா, பூஞ்ச், குல்மார்க், நவ்சேரா, குரேஷ், லோலப், கங்கான், பகல்காம், குல்காம், பட்காம் உட்பட பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் காஷ்மீர் பிராந்தியத்தில் தேசிய மாநாட்டு கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. குப்வாரா, புல்வாமா, ட்ரால் தொகுதிகளில் பிடிபி வெற்றி பெற்றது. ரஜோரி, துாரு, அனந்த்நாக், பந்திபோரா உட்பட ஆறு தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தோடா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். ஹந்த்வாராவில் ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க 46 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. தற்போதைய நிலையில், தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தற்போதைய முன்னணி நிலவரம் அப்படியே வெற்றியாக மாறினால், தேசிய மாநாட்டு கட்சி 41, காங்கிரஸ் 6 இடங்களில் வெல்லும். அந்த இரு கட்சிகளும் சேர்ந்து பெரும்பான்மை எண்ணிக்கையை கடக்க முடியும் என்பதால், அங்கு இண்டி கூட்டணி ஆட்சி உறுதியாகியுள்ளது. ஸ்ரீநகரில் தன் வீட்டின் முன் திரண்ட தேசிய மாநாட்டு கட்சி தொண்டர்களை பார்த்து கையசைத்து மூத்த தலைவர் பரூக் அப்துல்லா அவர்களை உற்சாகப்படுத்தினார். தேர்தல் முடிவுகள் குறித்து பரூக் அப்துல்லா கூறியதாவது: ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலில் மக்கள் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உள்ளனர். ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை மக்கள் விரும்பவில்லை என்பது தெளிவாகியுள்ளது. மக்கள் எங்களை நம்பி ஓட்டளித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை காக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. மக்களின் நம்பிக்கையை நாங்கள் பூர்த்தி செய்வோம். இங்கு மக்களை மிரட்டும் செயல்களுக்கு முடிவுகட்ட வேண்டும். இங்கு போலீஸ் ராஜ்ஜியம் நடக்கக் கூடாது. மக்கள் ராஜ்ஜியம் நடக்க வேண்டும். அதை நாங்கள் உறுதி செய்வோம் என பரூக் அப்துல்லா கூறினார்.