ஐதராபாத் அமலாக்கத்துறை ஆபீசில் அசாருதீன் ஆஜர் Azharuddin| HCA| ED enquiry
ஐதராபாத் அமலாக்கத்துறை ஆபீசில் அசாருதீன் ஆஜர் Azharuddin| HCA| ED enquiry ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் 20 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்ததாக பதியப்பட்ட வழக்கில், சட்டவிரோத பணப்பறிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனும், ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவருமான அசாருதீனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. முன்னதாக, கடந்த 3ம் தேதி விசாரணைக்கு ஆஜராக அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. வேறு தேதியை ஒதுக்குமாறு அவர் கேட்டதால் 8ம் தேதிஆஜராக அமலாக்கத்துறை சொன்னது. ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த விசாரணைக்கு அசாருதீன் ஆஜர் ஆனார். அதிகாரிகள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். 2019 முதல் 2023 வரை ஐதராபாத் கிரிகெட் சங்கத்தின் தலைவராக அசாருதீன் பதவி வகித்தார். அப்போது, ஐதராபாத்தின் உப்பலில் ராஜிவ்காந்தி கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டது. அதற்கு தேவையான தீயணைப்பு சாதனங்கள், டெண்ட்கள் வாங்கியதில் கிரிக்கெட் சங்கத்தின் பணத்தில் 20 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்தாண்டு நவம்பரில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத 10.39 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. அதன் அடிப்படையில் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அசாருதீன் மீது வழக்கு தொடரப்பட்டது. அசாரூதீன் 2009ல் உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் லோக் சபா தொகுதியில் வெற்றிபெற்று அரசியல் பயணத்தை தொடங்கியவர். தற்போது, தெலங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராக இருக்கிறார். கடந்தாண்டு தெலங்கானா சட்டசபையில் போட்டியிட்டு தோற்றார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அசாருதீனுக்கு 2000ம் ஆண்டு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது. 2012ல் அதை ஆந்திரா ஐகோர்ட் ரத்து செய்தது.