ஹரியானா தேர்தல் முடிவு தலைகீழாக மாறியது எப்படி? Haryanan eletion| Bjp| RSS| Congress
ஹரியானா தேர்தல் முடிவு தலைகீழாக மாறியது எப்படி? Haryanan eletion| Bjp| RSS| Congress ஹரியானாவில் காங்கிரஸ்தான் ஜெயிக்கும்என்று அனைத்து கருத்து கணிப்புகளும் அடித்து கூறின. அதையெல்லாம் பொய் ஆக்கிய பாஜ, 3வது முறையாக ஆட்சியை தக்கவைத்து சாதனை படைத்தது. ஓட்டு சதவீதமும் அதிகரித்தது. இது யாரும் எதிர்பாராத திருப்பம். ஓட்டு இயந்திரங்கள் மீது பழிபோடும் அளவுக்கு காங்கிரஸ் மனம் நொந்து போயிருப்பதே இதற்கு சாட்சி. அரசியல் விமர்சகர்கள் ஆளுக்கொரு காரணம் சொன்னாலும், ஆர்எஸ்எஸ் களம் இறங்கியதுதான், தேர்தல் முடிவு மாறியதற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஹரியானாவில் 2019 லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 10 இடங்களை பாஜ பிடித்தது. ஆனால், 2024 தேர்தலில் பாதி இடங்கள்தான் கிடைத்தன. தேசிய அளவில் கூட பாஜவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணிகள் தயவில் பாஜ ஆட்சிஅமைத்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பை விட்டு விலகி சென்றதன் விளைவுதான் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். லோக்சபா தேர்தலுக்கு முன்பு, ஆர்எஸ்எஸ் தயவு தேவைப்படும் நிலையில் பாஜ இல்லை என அதன் தலைவர் நட்டா கூறியிருந்தார். மோடி அரசின் நடவடிக்கைகள், அணுகுமுறைகள் தங்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை என்று ஆர்எஸ்எஸ் சொல்லியும் அரசின் போக்கில் மாற்றம் தெரியவில்லை. இதனால், பாஜவுக்காக தேர்தல் களப்பணி செய்வதில் இருந்து முதல் முறையாக ஆர்எஸ்எஸ் ஒதுங்கியது. அதன் தாக்கம் தான் லோக்சபா தேர்தல் ரிசல்ட் உணர்த்தியது. 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஹரியானாவும் கைவிட்டு போனால், அடுத்து வரும் மகாராஷ்டிரா, ஜார்கண்ட், டெல்லி, பீகார் தேர்தல்களை சந்திப்பது பெரும் சவால் ஆகிவிடும் என்பதை பாஜ தலைமை உணர்ந்தது. ஆர்எஸ்எஸ் உடன் சமாதானம் பேசினர். உடனடியாக சமரசம் ஏற்பட்டது. விவசாயிகள் போராட்டத்தை சரியாக கையாளாமலும், கட்சியினரை சந்திக்காமலும் மக்கள் செல்வாக்கை இழந்த முதல்வர் கட்டார் மாற்றப்பட்டார். பற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த சைனி ஹரியானா முதல்வராக அமர்த்தப்பட்டார். ஒவ்வொரு கிராமமாக சென்று கட்சியினர் விவசாயிகளை சந்தித்து அவர்களின் மனக்காயம் ஆற்றும் வேலை அவருக்கு தரப்பட்டது. மக்களுடன் நேரடி தொடர்பில் சுறுசுறுப்பாக இயங்கும் மாற்று கட்சிகளின் தலைவர்களை பா.ஜ.,வுக்கு அழைத்து வரும் பணி மாநில பா.ஜ., தலைமைக்கு தரப்பட்டது. கட்டார் மீதும், கட்சியின் மீதும் அதிருப்தியில் இருக்கும் தொண்டர்களுக்கு பதிலாக, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களே மாநிலம் முழுவதம் பிரசாரத்தில் இறங்கினர். ஒரே மாதத்தில் 16000 கூட்டங்கள் நடத்தினர். அதிருப்தியில் இருந்த ஜாட், தலித் இன பிரமுகர்களை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் அடிக்கடி சந்தித்து இணக்கத்துக்கு கொண்டு வந்தனர். பழையவர்களுக்கு பதிலாக உள்ளூர் புது முகங்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். விளம்பர பரபரப்பு இல்லாமல் ஆர்எஸ்எஸ் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கை தேர்தலின் போக்கை மாற்றியது. அதற்கு பாஜவுக்கு கைமேல் பலனும் கிடைத்தது.