போராட வந்த சாம்சங் ஊழியர்களுக்கு அனுமதி மறுப்பு
போராட வந்த சாம்சங் ஊழியர்களுக்கு அனுமதி மறுப்பு காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் நிறுவனம் செயல்படுகிறது. இதன் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் சிஐடியு தொழிற்சங்கத்தை அங்கீகாரம் செய்வது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர். 7 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தும் தீர்வு ஏற்படவில்லை. அமைச்சர்கள் அன்பரசன், ராஜா, கணேசன் முன்னிலையில் 2 தினங்களுக்கு முன் பேச்சுவர்த்தை நடந்தது. 5000 ரூபாய் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைளை நிறுவனம் ஏற்றது. ஆனால், தொழிற்சங்க அங்கீகாரத்தை ஏற்கவில்லை. இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் அதன் தீர்ப்பு வந்தபின் அதன்படிஅரசு செயல்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர். போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் சிஐடியுவை கேட்டுக்கொண்டனர். இதை ஏற்காத தொழிலாளர்கள் தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றனர். 8 ம் தேதி போராட்டத்திற்காக சாம்சங் ஊழியர்களை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து 5 பேர் காயமடைந்தனர். போலீசாரின் கெடுபிடியால்தான் விபத்து நடந்ததாக தொழிலாளர்கள் வாக்குவாதம் செய்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் கீழே தள்ளிவிடப்பட்டார். அன்று இரவே, தொழிலாளர்களின் போராட்ட பந்தலை போலீசார் அகற்றினர். சப் இன்ஸ்பெக்டரை தாக்கியதாக 7 பேர் மீது வழக்குப்பதியப்பட்டது. பந்தல் அகற்றிய இடத்தில் நேற்று மீண்டும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த கூடினர். சிஐடியு மாநில தலைவர் சவுந்திரராஜன், சாம்சங் சிஐடியு தலைவர் முத்துகுமார் உட்பட 616 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது போலீசாரை தாக்கியதாக எலன், சூர்யபிரகாஷ் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்த தடை இல்லை என்று ஐகோர்ட் நேற்று தீர்ப்பு கூறியிருந்தது. இந்நிலையில் இன்றும் சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்துவதற்காக சென்றனர். ஆனால், சுங்குவார்சத்திரத்தில் ஏற்கனவே போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் போராட்டத்திற்கு வந்த ஊழியர்களை வழியிலேயே தடுத்தனர். அனுமதி இல்லை எனக்கூறி கைது செய்தனர்.