பாதுகாப்பு இல்லை: அரசு கல்லூரி மாணவர்கள் மறியல் indiragandhi arts& science college| pondicherry
புதுச்சேரி, கதிர்காமத்தில் இயங்கி வந்த இந்திராகாந்தி அரசு அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், இந்திராநகர் அரசுப்பள்ளி கட்டடத்தில் இந்திராகாந்தி கலை அறிவியல் கல்லூரி தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவி ஹேமலதா கழிவறைக்கு சென்றபோது, கட்டடத்தின் கூரை கான்கிரீட் பெயர்ந்து மாணவி மீது விழுந்தது. கழுத்து, தோல்பட்டை, காலில் பலத்த காயமடைந்த மாணவியை சக மாணவ, மாணவிகள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால், கூரையின் கான்கிரீட் தண்ணீரில் ஊறி பெயர்ந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை கண்டித்தும், வகுப்பறை கட்டடத்தை சரி செய்துதர கோரியும் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, கதிர்காமம்- வழுதாவூர் சாலையில் மறியல் செய்தனர். பள்ளி கட்டடம் பழுதடைந்துள்ளது. மழையின்போது தண்ணீர் வகுப்பறைக்குள் வருகிறது. அடிக்கடி மின்சாரம், குடிநீர் கட் ஆகிறது. புதர்கள் மண்டி இருப்பதால் பூச்சிகள் வகுப்பறைக்குள் வருவதாக புகார் கூறியும் கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என கூறினர்.