இதோட பவரே வேற! இஸ்ரேல் கையில் THAAD அரக்கன் | Israel vs Iran | israel vs hezbollah | what is THAAD
இதோட பவரே வேற! இஸ்ரேல் கையில் THAAD அரக்கன் | Israel vs Iran | israel vs hezbollah | what is THAAD காசாவில் உள்ள ஹமாசுக்கு எதிராக ஓராண்டு முன்பு போரை துவங்கிய இஸ்ரேல் இப்போது ஹெஸ்புலாவுக்கு எதிராகவும் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பின் உச்ச தலைவன் ஹனியேவை ஏற்கனவே போட்டுத்தள்ளிய இஸ்ரேல், புதிய தலைவனாக நியமிக்கப்பட்ட யாஹ்யா சின்வாரையும் சில நாட்கள் முன்பு தீர்த்துக்கட்டியது. ஹெஸ்புலா தலைவன் ஹசன் நஸ்ரல்லாவையும் சமீபத்தில் கொன்று விட்டது இஸ்ரேல் ராணுவம். இப்படி முக்கிய தலைவர்களை குறி வைத்து இஸ்ரேல் தீர்த்துக்கட்டும் படலம், ஹமாஸ், ஹெஸ்புலா, ஹவுதி பயங்கரவாத அமைப்புகளுக்கு தீனிப்போட்டு வளர்க்கும் ஈரானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. நஸ்ரல்லாவை கொன்றதை தாங்கிக்கொள்ள முடியாத ஈரான், அக்டோபர் 1ம் தேதி இஸ்ரேல் மீது சரமாரியாக குண்டு மழை பொழிந்தது. ஒரே நேரத்தில் சக்திவாய்ந்த 180 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது போட்டது. பல குண்டுகளை இஸ்ரேலின் வான்வெளி பாதுகாப்பு கருவிகள் இடைமறித்து அழித்துவிட்டன. இருப்பினும் சில குண்டுகள் இஸ்ரேலை பதம் பார்த்தன. குறிப்பாக நேவாடிம் (Nevatim) விமானப்படை தளம் சேதம் அடைந்தது. இது இஸ்ரேலின் மிகப்பெரிய விமானப்படை தளங்களில் ஒன்று. இங்கு மட்டும் 3 ரன்வே இருக்கிறது. இது தவிர இஸ்ரேலியர் ஒருவரும், பாலஸ்தீனியர் ஒருவரும் கொல்லப்பட்டனர். சிலர் காயம் அடைந்தனர். ஈரானின் இந்த திடீர் தாக்குதல் இஸ்ரேலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இஸ்ரேல் மீது கை வைத்து ஈரான் பெரிய தப்பு செய்து விட்டது. மிகப்பெரிய பதிலடியை ஈரான் வாங்கியே தீரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சொல்லி இருந்தார். இதனால் எந்த நேரமும் ஈரானை இஸ்ரேல் தாக்கும் அபாயம் உருவானது. ஈரானின் அணு உற்பத்தி மையங்கள், எண்ணெய் கிடங்குகளை இஸ்ரேல் குறி வைப்பதாக அச்சம் எழுந்தது. ஆனால் அப்படிப்பட்ட தாக்குதலை இஸ்ரேல் நடத்தக்கூடாது என்று பல நாடுகள் வலியுறுத்தின. இதனால் அணு உற்பத்தி மையத்தை தாக்கமாட்டோம் என்றது இஸ்ரேல். ஈரான் தாக்குதல் நடத்தியது அக்டோபர் 1ம் தேதி. ஆனால் உடனடியாக இஸ்ரேல் பதிலடி கொடுக்கவில்லை. இதனால் ஈரானின் உச்ச தலைவர் கமெனியை தீர்த்துக்கட்ட இஸ்ரேல் திட்டம் தீட்டி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. உடனடியாக கமெனி ரகசிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் இருக்கும் இடத்தை சுற்றி சீனாவின் ஏவுகணை தடுப்பு கவசத்தை வைத்து அரண் அமைத்தது ஈரான். 20 நாட்கள் ஆகி விட்ட நிலையில் இதுவரை இஸ்ரேல் பதிலடி கொடுக்கவில்லை. ஆனால் இனி எந்த நேரத்திலும் பதிலடியை எதிர்பார்க்கலாம். காரணம் இஸ்ரேல் இவ்வளவு நாட்கள் காத்திருந்தது அமெரிக்காவின் THAAD (தாட்) என்னும் பாதுகாப்பு கவசத்துக்காக தான். சமீபத்தில் இந்த பாதுகாப்பு கவசம் இஸ்ரேலுக்கு கொண்டு வரப்பட்டது. இப்போது இஸ்ரேலில் அதை நிறுவி விட்டார்கள். இந்த தாட் பாதுகாப்பு கவசத்தில் அப்படி என்ன விசேஷம்? இதற்காக ஏன் இஸ்ரேல் காத்திருந்தது என்பதை பார்க்கலாம். Terminal High Altitude Area Defense என்பதை தான் THAAD என்று சுருக்கமாக அழைக்கிறது அமெரிக்கா. தாட் என்பது சக்திவாய்ந்த ஏவுகணை தடுப்பு கவசம். இந்த தடுப்பு சிஸ்டத்தில் ஏவுகணை லாஞ்சர்களுடன் கூடிய 6 டிரக் இருக்கும். ஒவ்வொரு டிரக்கிலும் 8 லாஞ்சர் என மொத்தம் 48 லாஞ்சர் உண்டு. இவற்றுடன் ராடார் அமைப்பும், ஏவுகணைகளை ஏவ தேவையான இதர கருவிகளும் பொருத்தப்பட்டு இருக்கும். இதை இயக்க மொத்தம் 95 வீரர்கள் தேவைப்படுவார்கள். இஸ்ரேலுக்கு தாட் கருவியுடன் சேர்த்து அதை இயக்குவதற்காக 100 வீர்களையும் வழங்கியது அமெரிக்கா. எந்த வகை பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் சர்வ சாதாரணமாக இடைமறித்து அழிக்கும் வல்லமை கொண்டது தாட். பக்கத்தில் இருந்து ஏவினாலும், தூரத்தில் இருந்து ஏவினாலும் தட்டி தூக்கி விடும். குறிப்பாக 5000 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து ஏவினால் கூட இடைமறித்து துல்லியமாக அழிக்கும் திறன் கொண்டது. தாட் சிஸ்டத்தால் வளிமண்டலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பறந்து சென்று எதிரிகளின் ஏவுகணைகளை தகர்க்க முடியும். ஒரு தாட் அமைப்பால் 150 முதல் 200 கிலோ மீட்டர் எல்லையை பாதுகாக்க முடியும். அமெரிக்கா வழங்கிய தாட் சிஸ்டம் இப்போது இஸ்ரேலில் ரெடி ஆகி விட்டது என்று அமெரிக்கா கூறி உள்ளது. ஆனால் இஸ்ரேலின் எந்த இடத்தில் அதை நிறுவினார்கள் என்பதை சொல்லவில்லை. இருப்பினும் நேவாடிம் விமானப்படை தளம் மற்றும் அதை சுற்றிய பகுதியை பாதுகாக்கும் வகையில் தாட் நிறுவப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரு தாட் சிஸ்டத்தை கட்டமைத்து, நிறுவ வேண்டும் என்றால் 21 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும். ஏற்கனவே மொத்த இஸ்ரேலையும் பாதுகாக்க அந்த நாட்டிடம் அயன்டோம், டேவிட் ஸ்லிங், ஆரோ என்னும் மூன்று சக்தி வாய்ந்த பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. குறுகிய தூரம் பறக்கும் தன்மை கொண்ட எதிரிகளின் ராக்கெட் குண்டு மற்றும் ஏவுகணைகளை அயன்டோம் பார்த்துக்கொள்ளும். நடுத்தரமான தூரம் பறந்து தாக்கும் எதிரி ஏவுகணைகளை டேவிட் ஸ்லிங் தாக்கி அழிக்கும். நீண்ட தூரம் பறக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணைகளை ஆரோ அமைப்பு இடைமறித்து அழிக்கும். ஏற்கனவே இஸ்ரேலிடம் இவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும் ஈரான் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள கூடுதல் சப்போர்ட்டுக்காக தான் தாட் சிஸ்டத்தை அமெரிக்கா வழங்கி உள்ளது. இந்த தாட் அமைப்பால் பெரிய பெரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை தாக்கி அழிக்க முடியும் என்றாலும், சிறிய ராக்கெட் குண்டுகளை இவை இடைமறிக்காது. அவற்றை இஸ்ரேலின் மற்ற பாதுகாப்பு அமைப்புகள் பார்த்துக்கொள்ளும். தாட் கவசம் நிறுவப்பட்டதால் தான் இனி எந்த நேரத்திலும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், உடனே ஈரானும் பதில் தாக்குதல் நிச்சயம் நடத்தும். அந்த நேரத்தில் தாட் கவசம் கைகொடுக்கும் என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் நம்புகிறது. ஒரு தாட் சிஸ்டத்தால் 150 முதல் 200 கிலோ மீட்டர் எல்லையை தான் பாதுகாக்க முடியும் என்பதால், கூடுதல் தாட் சிஸ்டம் வேண்டும் என்று அமெரிக்காவிடம் இஸ்ரேல் கேட்டுள்ளது. எனவே கூடுதல் தாட் கவசங்களும் இஸ்ரேலுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.