வக்பு போர்டு மசோதா; JPCயில் சண்டை Waqf board bill JPC meeting
வக்பு போர்டு மசோதா; JPCயில் சண்டை Waqf board bill JPC meeting Trinamool MP smashes glass bottle injury in hand fight with bjp mps வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா கடந்த ஜூலை 28 ம்தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. முஸ்லிம்களை பழிவாங்கும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, இம்மசோதாவை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க பாஜ எம்பி ஜகதாம்பிகா பால் தலைமையில் பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இந்த கூட்டுக்குழுவில் லோக்சபா, ராஜ்ய சபாவை சேர்ந்த அனைத்து கட்சி எம்பிக்களும் இடம்பெற்றுள்ளனர். திமுகவின் ஆ.ராசாவும் இடம்பெற்றுள்ளார். கூட்டுக்குழுவின் கூட்டம் பார்லிமென்ட் கட்டடத்தில் இன்று நடந்தது. சில நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கூட்டத்துக்கு வந்திருந்தனர். வக்பு திருத்த மசோதா பற்றி அவர்களிடம் தலைவர் ஜகதாம்பிகா பால் கருத்து கேட்டார். அதற்கு எதிர்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வக்பு விவகாரத்தில் இவர்கள் கருத்தை எதற்காக கேட்கிறீர்கள்? இவர்களுக்கும் மசோதாவுக்கும் என்ன சம்பந்தம்? என எதிர்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். சட்ட வல்லுநர்களின் கருத்தை கேட்பது தவறா? என பாஜ உறுப்பினர்கள் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, திரிணமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி எழுந்து பேச முயன்றார். அவருக்கு பாஜ எம்பி அபிஜித் கங்கோபாத்யாய் எதிர்ப்பு தெரிவித்தார். உங்களுக்குரிய நேரத்தில் மட்டும் பேசுங்கள் என்றார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கல்யாண் பானர்ஜி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி கத்தியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கல்யாண் பானர்ஜி தன்னிலை மறந்து கோபத்தின் உச்சத்துக்கு போனார். குடிநீர் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பாட்டிலை எடுத்து மேஜையில் அடித்து உடைத்து நொறுக்கினார். உடைந்த பாட்டிலை தலைவர் இருக்கையை நோக்கி எறியவும் முயன்றார். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. பார்லிமென்ட் கூட்டுக்குழு கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. கல்யாண் பானர்ஜி கைவிரல்களில் பாட்டில் குத்திக்கிழித்தது. ரத்தம் கொட்டியது. உடனடியாக அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது. பிறகு, அவரை ஏஐஎம்ஐஎம் AIMIM கட்சித் தலைவர் அசதுத்தீன் ஒவைசி, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். கைவிரல்களில் ஏற்பட்ட காயத்துக்காக 4 தையல்களை போட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக கல்யாண் பானர்ஜியை ஒருநாள் சஸ்பெண்ட் செய்ய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனால் அடுத்த முறை பார்லிமென்ட் கூட்டுக்குழு கூட்டம் நடக்கும்போது, கல்யாண் பானர்ஜி பங்கேற்க முடியாது. கடந்த வாரம் கூட்டுக்குழு கூட்டம் நடந்தபோதும் பாஜ எம்பிக்கள் அபிஜித் கங்கோபாத்யாய், நிஷிகாந்த் துபே, திலிப் சைகியா ஆகியோருடன் கல்யாண் பானர்ஜி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாஜ எம்பிக்கள் கண்டபடி பேசுகின்றனர்; ஆனால் அவர்கள் மீது தலைவர் ஜகதாம்பிகா பால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை; விதிகளை காற்றில் பறக்கவிடுகிறார் என குற்றம்சாட்டி எதிர்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். குழுவில் இடம்பெற்றுள்ள பாஜ எம்பி தேஜஸ்வி சூர்யா, கடந்த வாரம் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் அனுப்பினார். கூட்டுக்குழு தலைவர் ஜகதாம்பிகா பாலை மிரட்டும் தொனியில் எதிர்கட்சி எம்பிக்கள் பேசுவதாக புகார் கூறியிருந்தார். அதுபற்றி சபாநாயகர் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று கல்யாண் பானர்ஜி கோபத்தில் கண்ணாடி வாட்டர் பாட்டலை உடைத்து தன்னையே காயப்படுத்திக் கொண்ட சம்பவம் எம்பிக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.