50 பைசாவால் அஞ்சல் துறையே அலறிப்போச்சு | Post Office | 50 Paisa issue
50 பைசாவால் அஞ்சல் துறையே அலறிப்போச்சு | Post Office | 50 Paisa issue சென்னை கிருகம்பாக்கத்தை சேர்ந்தவர் மானுஷா. இவர் 2023 டிசம்பர் 3ம் தேதி பொழிச்சலூர் போஸ்ட் ஆபீஸில் பதிவு தபால் அனுப்பியுள்ளார். அதற்கான கட்டணம் 29 ரூபாய் 50 காசுகள் என கூறப்பட்டது. ஆனால் போஸ்ட் ஆபீஸ் ஊழியர் 30 ரூபாயாக கேட்டுள்ளார். சரியான தொகை மட்டுமே கொடுப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார் மானுஷா. டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையில் சரியாக 29 ரூபாய் 50 காசு செலுத்த தயார் என கூறியுள்ளார். தொழில்நுட்ப சிக்கல் காரணமாக அப்படி செலுத்த முடியாது. 29 ரூபாய் 50 காசு என கட்டணம் வந்தால் சிஸ்டம் தானாகவே 30 ரூபாயாக கணக்கில் எடுத்துக்கொள்ளும். நீங்க 50 பைசா சேர்த்து 30 ரூபாய் கொடுத்தே ஆக வேண்டும் என போஸ்ட் ஆபீஸ் ஊழியர் கூறியுள்ளார். அவர்கள் கேட்ட கூடுதல் தொகை பணமாக கொடுக்கப்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த மானுஷா மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார். போஸ்ட் ஆபீஸின் இந்த நடவடிக்கையால் கணிசமான பணம் மக்களிடம் இருந்து பறிக்கப்படும். அது கணக்கில் வராத கருப்பு பண பட்டியலில் வரும், அரசுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு உண்டாகும் என புகாரில் கூறப்பட்டது. சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மானுஷா புகார் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தான் 29 ரூபாய் 50 காசு 30 ரூபாயாக கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது. மானுஷா டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த முடியாமல் போன பிறகு மே 2024ல் Pay U என்கிற UPI பண செலுத்தும் வசதி நீக்கப்பட்டது. அதில் உள்ள கோளாறுகள் சரி செய்யப்பட்ட பிறகு மீண்டும் சேர்க்கப்படும் என போஸ்ட் ஆபீஸ் தரப்பு விளக்கமளித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நுகர்வோர் ஆணையம் போஸ்ட் ஆபீஸ் அதிக கட்டணம் வசூல் செய்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என கூறியது. மானுஷாவுக்கு இழப்பீடாக 10 ஆயிரமும், வழக்கு செலவுக்காக5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது. கூடுதலாக வசூலிக்கப்பட்ட 50 காசுகளை திரும்ப வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.