மோடி-ஜின்பிங் சந்திப்பு... உலகமே உற்றுநோக்கியது இதற்கு தான் | Modi-Xi Jinping meet | BRICS summit
மோடி-ஜின்பிங் சந்திப்பு... உலகமே உற்றுநோக்கியது இதற்கு தான் | Modi-Xi Jinping meet | BRICS summit பிரிக்ஸ் அமைப்பின் 16வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நடந்தது. பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமைப்பில் உள்ள இதர நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். இந்த அமைப்பில் இந்தியா, ரஷ்யா, சீனா என முக்கிய நாடுகள் அங்கம் வகிப்பதால் முதலில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இந்த மாநாட்டை உன்னிப்பாக கவனித்து வந்தன. இதற்கு முக்கிய காரணம் மோடியும், ஜி ஜின்பிங்கும் ஒரே நிகழ்வில் சந்திப்பது தான். 2020ல் லடாக் எல்லையில் நடந்த இந்திய, சீன வீரர்கள் மோதலால் இரு நாட்டு உறவும் பெரிய அளவில் விரிசல் அடைந்தது. அதற்கு முன்பு மோடியும், ஜி ஜின்பிங்கும் 18 முறை சந்தித்து பேசி இருந்தனர். ஆனால் இந்த மோதலுக்கு பிறகு ஒரு முறை கூட இரு தலைவர்களும் பேசியது இல்லை. லடாக் மோதலை தொடர்ந்து அருணாச்சலப்பிரதேசம், லடாக் எல்லைகளில் தொடர்ந்து சீனா வாலாட்டி வந்தது. தொடர்ந்து இந்தியாவுக்கு எரிசலூட்டும் வகையில் அதன் நடவடிக்கை இருந்தது. இதனால் இரு நாடுகள் இடையே மீண்டும் நல்லுறவு மலருமா என்று பெரிய அளவில் சந்தேகம் எழுந்தது. எனவே தான் இரு தலைவர்களும் ஒரே நிகழ்வில் பங்கேற்பது இந்தியா, சீனாவை தாண்டி உலக அரங்கில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்படியொரு பரபரப்பான சூழலில் தான் மோடி, ஜி ஜின்பிங் சந்திப்பு நடந்தது. மாநாட்டின் ஒரு பகுதியாக 2 தலைவர்களும் சந்தித்தனர். இந்தியா-சீனா உறவை மேம்படுத்த பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இந்தியா சொல்ல வேண்டியதை ஜி ஜின்பிங்கிடம் நேர்த்தியான முறையில் சொன்னார் மோடி. அவர் கூறியதாவது: கசான் நகரில் தங்களை சந்திப்பது மகிழ்ச்சி. கடைசி 5 ஆண்டில் முதல் முறையாக சந்தித்து இருக்கிறோம். நம் நாட்டு மக்களை போல் சர்வதேச சமூகமும் இந்த சந்திப்பை ஆர்வமுடன் கவனித்து வருகிறது. இந்தியாவும் சீனாவும் பழையான நாகரீகம் கொண்ட நாடுகள். வேகமாக வளர்ந்து வரும் உலகின் முக்கிய நாடுகள். நம் நாட்டு மக்களுக்காக மட்டும் அல்லாமல், உலக நாடுகளுக்காகவும் இந்தியா, சீனா உறவு முக்கியமானது. உலகில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சி ஏற்பட நம் இரு நாடுகளின் நல்லுறவும் அவசியமானது. 4 ஆண்டுகளாக நிலவிய எல்லை பிரச்னைக்கு இப்போது தீர்வு ஏற்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இந்தியா, சீனா எல்லையில் அமைதி நிலவுவது தான் மிகவும் அவசியமானது. இரு நாடுகள் இடையே பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர ஒத்துழைப்பு முக்கியம். இது தான் நம் உறவுக்கு அடிப்படை என்று மோடி சொன்னார். கார்டு பிரதமர் மோடி மோடியின் கருத்தை வரவேற்ற ஜி ஜின்பிங், மோடி சொன்னதை உறுதி செய்வது போல் பேசினார். அவர் கூறியது: இந்தியா, சீனா இடையே நிலவும் வேறுபாடுகளை களைய இன்னும் கூடுதல் பேச்சு வார்த்தை, ஒத்துழைப்பு தேவை. இரு நாடுகளும் வளர்ச்சியை நோக்கி பயணிப்பதில் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. இந்தியாவும், சீனாவும் தங்களுக்கு இருக்கும் சர்வதேச கடமைகளை தங்கள் தோள்களில் சுமப்பது முக்கியமானது. உதாரணத்துக்கு, வளர்ந்து வரும் நாடுகள் இடையே வலிமை, ஒற்றுமையை கொண்டு வருவதிலும், சர்வேதச நாடுகள் இடையேயான உறவில் ஜனநாயகத்தை கொண்டு வருவதிலும் சீனா, இந்தியாவின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று சீன அதிபர் கேட்டுக்கொண்டார். கடைசியாக மோடியும் ஜி ஜின்பிங்கும் 2019 இதே அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் சந்தித்தனர். சீன அதிபருக்கு மாமல்லபுரத்தின் புரதான சின்னங்களை மோடி காட்டினார். 5 ஆண்டுக்கு பிறகு இப்போது நடந்த சந்திப்பு இந்தியா, சீனா உறவில் புதிய அத்தியாயத்தை கொண்டு வந்துள்ளது. இதை மத்திய அரசும் வெளிப்படுத்தியது. மோடி, ஜி ஜின்பிங் பேச்சு வார்த்தை பெரிய முன்னேற்றத்தை கொண்டு வந்து இருக்கிறது. இந்தியா, சீனா உறவை மீண்டும் கட்டமைக்க அடித்தளம் அமைத்துள்ளது என்று மத்திய அரசு கூறியது. 2020 லடாக் மோதலுக்கு பிறகு எல்லையில் இருபக்கமும் வீரர்கள் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வந்தது. வீரர்களை வாபஸ் வாங்கிக்கொண்டு, வழக்கமான ரோந்து பணியை மேற்கொள்ளலாம் என்று சில நாட்கள் முன்பு தான் இந்தியா, சீனா ஒப்பந்தம் போட்டது. இது இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைக்கு கிடைத்த பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.