கமலா ஹாரிசை வாரிவிட்ட ஸ்விங் ஸ்டேட்ஸ் 7 Swing states in USA election| Donald Trump
கமலா ஹாரிசை வாரிவிட்ட ஸ்விங் ஸ்டேட்ஸ் 7 Swing states in USA election| Donald Trump| Kamala Harris| US Presidential election result உலகே உற்று நோக்கிய அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக அடுத்த ஆண்டு ஜனவரி 20ம்தேதி அவர் பதவியேற்பார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் கடும் போட்டியை கொடுத்தார். ஸ்விங் ஸ்டேட்ஸ் எனப்படும் ஏழு மாகாணங்கள் கைவிட்டதால் தோல்வி அடைந்தார். அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்தில் இருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். மொத்தம் 538 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவர். யாருக்கு 270 பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கிறதோ அவரே அதிபர் தேர்தலில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். டொனால்டு டிரம்ப் 315 பிரதிநிதிகளின் ஆதரவை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கமலா ஹாரிசை கைவிட்ட அந்த ஸ்விங் ஸ்டேட்ஸ் எனப்படும் அந்த ஏழு மாகாணங்களே டிரம்பை 2வது முறை அதிபராக்கியுள்ளது. பென்சில்வேனியா, ஜார்ஜியா, வடக்கு கரோலினா, மிச்சிகன், அரிசோனா, விஸ்கான்சின், நெவாடா ஆகியவையே அந்த ஏழு மாகாணங்கள். 2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், இந்த மாகாணங்கள்தான் ஜோ பைடனுக்கு கைகொடுத்தன. வடக்கு கரோலினாவில் மட்டும் டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சி அப்போது வெற்றி பெற்றது. மற்ற 6 மாகாணங்களிலும் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி வென்றது. ஆனால் இம்முறை, பிற மாகாணங்களை காட்டிலும், இந்த 7 மாகாணங்களில் பிரசாரம் செய்வதில் டொனால்டு டிரம்ப் அதிக கவனம் செலுத்தினார். இந்த ராஜதந்திரம்தான் டிரம்புக்கு கை கொடுத்தது. இதன் பலனாக இம்முறை ஸ்விங் ஸ்டேட்ஸ் எனப்படும் மேற்கண்ட 7 மாகாணங்களையும் டிரம்ப் மொத்தமாக அள்ளினார். ஸ்விங் ஸ்டேட்ஸ்களில் கடந்த முறை 1க்கு- 6 என்ற கணக்கில் கோட்டைவிட்ட டிரம்ப், இம்முறை 7க்கு 0 என அப்படியே தன்வசமாக்கினார். ஒரு கட்டத்தில், டிரம்புக்கு 230 பிரதிநிதிகளின் ஓட்டும், கமலா ஹாரிஸ்க்கு 210 பிரதிநிதிகளின் ஓட்டும் கிடைத்திருந்தது. இந்த ஏழு ஸ்விங் ஸ்டேட்ஸ்களில் டிரம்ப் பெற்ற வெற்றி அதிபர் தேர்தல் முடிவை அப்படியே புரட்டிப் போட்டது. டிரம்ப்பை மிக நெருக்கமாக விரட்டி வந்த கமலா திடீரென பின்னுக்குத் தள்ளப்பட்டார். டிரம்ப் எளிதாக 270 என்ற மேஜிக் நம்பரை கடந்தார். 11 பிரதிநிதிகளை கொண்டுள்ள அரிசோனா மாகாணம், எப்போதும் ஜனநாயக கட்சியின் கோட்டையாகவே திகழ்ந்தது. ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பின் இம்முறை அது குடியரசு கட்சி வசம் சென்றுள்ளது. ஜனநாயக கட்சியின் மற்றொரு எக்கு கோட்டையான ஜார்ஜியாவும், டிரம்ப் வசம் சென்றது. இங்கு, 16 பிரதிநிதிகள் உள்ளனர். வடக்கு கரோலினாவில் 16 பிரதிதிநிகள் உள்ளனர். அது போன தேர்தலை போலவே மீண்டும் டிரம்பின் கோட்டையானது.. 6 பிரதிநிதிகளை கொண்ட நெவாடாவில் முதலில் கமலா முன்னிலை வகித்தார். போகப் போக அங்கும் டிரம்ப் முன்னிலை பெற்று இறுதியில் வெற்றியும் பெற்றார். பென்சில்வேனியாவில் 19, மிச்சிகனில் 15 விஸ்கான்சினில் 10 பிரதிநிதிகள் உள்ளனர். அந்த மூன்றையும் கூட ஜனநாயக கட்சியிடம் இருந்து தட்டிப்பறித்தார், டிரம்ப். வீழ்ந்த இடங்களில் மீண்டும் எழுச்சி பெற்று ஆட்சியை பிடிக்க ஆயத்தமாகியுள்ள டிரம்ப், மனித இனத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் போர்களை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன் என சூளுரைத்துள்ளார்.