அரசு உதவி பெறும் பள்ளிகளை குறிவைக்கும் டிப் டாப் திருடன் | Cheating to teachers
அரசு உதவி பெறும் பள்ளிகளை குறிவைக்கும் டிப் டாப் திருடன் | Cheating to teachers | Gentle man cheating | Madurai | Looting money | இன்றைய டிஜிட்டல் உலகில் ஆன்லைன் மூலம் தினம் ஒரு மோசடி அரங்கேறுவது வாடிக்கையாகி விட்டது. ஆனால் தைரியமாக மக்களை சந்தித்து பொய் சொல்லி ஏமாற்றி பணம் பறிக்கும் ஒரு சிலர் இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படி ஒரு மோசடி சம்பவம் மதுரையில் நடந்தது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புதூர் பகுதியில் 52 வயது மதிக்கத்தக்க டிப் டாப் ஆசாமி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு உதவி பெறும் பள்ளிகளை குறிவைத்து சென்றுள்ளார். முதலில் சென்ற பள்ளியில் ஆசிரியர்களை சந்தித்து தான் அண்ணாமலை பல்கலையில் பணியாற்றுவதாக அறிமுகம் செய்து கொண்டுள்ளார். தனது கார் டிரைவரின் மகனுக்கு அட்மிஷன் கேட்டு வந்திருப்பதாக கூறி பேச்சு குடுக்கும் அவர், பல பள்ளிகளுக்கு ஸ்பான்சர் ஏற்பாடு செய்து கொடுத்திருப்பதாக சொல்லி தன் மீது நம்பிக்கை ஏற்படுத்த முயன்றுள்ளார். பின்னர் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் நல்ல நிலையில் இருக்கும் லேப்டாப் குறைந்த விலைக்கு கொடுக்கிறேன். அதுவும் ஒரு பள்ளிக்கு 4 லேப்டாப் தான். 2500 ரூபாய் கொடுத்தால் போதும் என்றிருக்கிறார். சுதாரித்துக்கொண்ட ஆசிரியர்கள் தேவைப்படும்போது சொல்கிறோம் என கூறி அவரை அனுப்பி வைத்து விட்டனர். இருப்பினும் முயற்சியை கைவிடாமல் அதே பகுதியில் இருக்கும் மற்ற பள்ளிகளுக்கும் சென்று இதே பாணியை கையாண்டிருக்கிறார் ஒரு பள்ளியில் அந்த ஆசாமியின் வார்த்தையை உண்மை என நம்பி 4 லேப்டாப்களுக்கு 10,000 ரூபாய் பணம் கொடுத்துள்ளனர். வெளியில் இருக்கும் ஆட்டோவில் இருந்து லேப்டாப்பை எடுத்து வருவதாக சொல்லிவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. அதன்பிறகே ஆசிரியர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமின்றி அதே பகுதியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையிலும் கைவரிசை காட்ட முயன்றிருக்கிறார். அவர்கள் சுதாரித்துக் கொண்டு அந்த ஆசாமியை திருப்பி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. பணத்தை கொடுத்து ஏமாந்த ஆசிரியர்கள் பள்ளியின் மூலம் இதுவரை புகார் கொடுக்க முன்வரவில்லை. மதுரை புதூர் பகுதியில் புதுவிதமான டிப் டாப் திருடன் உலா வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.