அரசு மருத்துவமனையின் அவலம்: நோயாளிகள் கடும் அவதி | Sirkazhi govt hospital | Shortage of doctors | P
அரசு மருத்துவமனையின் அவலம்: நோயாளிகள் கடும் அவதி | Sirkazhi govt hospital | Shortage of doctors | Patients suffer | Sirkazhi மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு மொத்தம் 21 டாக்டர் பணியிடங்கள் உள்ளன. ஆனால் மகப்பேறு தவிர்த்து 6 டாக்டர்கள் மட்டுமே சிகிச்சை அளித்து வந்தனர். அதிலும் 2 பேர் அயல் பணிக்கு அனுப்பப்பட்டதால் டாக்டர்கள் எண்ணிக்கை நான்காக குறைந்துவிட்டது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் வெளி மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் இன்று காலை சீர்காழி அரசு மருத்துவமனையில் ஒரு டாக்டர் மட்டுமே பணியில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் 10 மணி முதல் டாக்டர்கள் யாரும் இல்லை. இதனால் சிகிச்சை பெற வந்த ஏழை எளிய மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர். நீண்ட நேரம் காத்திருந்தும் டாக்டர்கள் வராததால் செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்களிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தலைமை மருத்துவர், காத்திருந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். சீர்காழி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாமல் நூற்றுக்கணக்கான நோயாளிகள் காத்திருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. தமிழக அரசு உடனடியாக தேவைக்கு ஏற்ப சிறப்பு நிபுணர்கள் உள்ளிட்ட கூடுதல் டாக்டர்களை பணியமர்த்த வேண்டுமென சீர்காழி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.