தாமிரபரணி கழிவுநீர் விவகாரம்; நீதிபதிகள் நேரில் ஆய்வு | Thamirabarani Sewage Issue | Thamirabarani R
தாமிரபரணி கழிவுநீர் விவகாரம்; நீதிபதிகள் நேரில் ஆய்வு | Thamirabarani Sewage Issue | Thamirabarani River | Tirunelveli திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் பல இடங்களில் கழிவுகள் கலப்பதாக தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி இன்று நேரில் ஆய்வு செய்ய வந்தனர். திருநெல்வேலி மீனாட்சிபுரம் பகுதியில் முதலில் ஆற்றின் களநிலவரம் பற்றி ஆய்வு நடந்தது. முன்னதாக சாக்கடை கலக்கும் பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடர் தூவி சரள் மண் அடித்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏன் இத்தனை பில்டப் செய்கிறீர்கள்? நாங்கள் சாக்கடைக்குள் வந்து பார்க்க மாட்டோம் காரில் இருந்தே சென்று விடுவோம் என நினைத்தீர்களா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, புள்ளி விபரங்கள் இருக்கிறது சார் விரைவில் முடித்து விடுவோம் என்றார். இதை கேட்ட நீதிபதி சுவாமிநாதன் உங்கள் புள்ளி விபரங்கள் அறிக்கை கேட்டு காது புளித்து விட்டது. எவ்வளவு காலத்துக்குள் இதை முடிப்பீர்கள் என அதிருப்தி தெரிவித்தார். சரமாரி கேள்விகளால் அதிகாரிகள் ஒதுங்கி கொண்டனர். தொடர்ந்து ஜங்ஷன் சிந்து பூந்துறை பகுதிகளில் ஆய்வு நடந்தது. ஆய்வின் போது திருநெல்வேலி கலெக்டர், மாநகராட்சி மேயர், துணை மேயர் உள்ளிட்ட யாரும் பங்கேற்கவில்லை. கமிஷனர் சுகபுத்ரா , வனத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உடன் வந்தனர். கமிஷனர் சுகபுத்திரா அடிக்கடி வாட்சை பார்த்துக் கொண்டார். என்ன சார் நேரம் ஆகிவிட்டதா அனைத்து இடங்களையும் பார்த்த பின் தான் இன்றைய மதிய உணவு. அதுவரை நீங்கள் உடன் இருக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் நீதிபதிகள் குழு பார்வையிட்டது. ராமயன்பட்டியில் கழிவு நீர் சுத்திகரிப்பு இடங்களிலும் ஆய்வு செய்து நீதிபதிகள் கிளம்பினர். அப்போது வழிமறித்த மக்கள் சிலர், நீங்கள் வருவதை அறிந்து கழிவு நீர் வெளியேறும் அளவை குறைத்துள்ளனர் என நீதிபதிகளிடம் மனு கொடுத்தனர். விரைவில் இந்த விவகாரத்தில் முக்கிய உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பிக்க வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.