மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை: காரணம் என்ன | Manipur issue | Meitei | Kuki | Manipur video
மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை: காரணம் என்ன | Manipur issue | Meitei | Kuki | Manipur video மணிப்பூரில் கொழுந்து விட்டு எரிந்த குக்கி, மெய்தி சமூக மக்கள் இடையேயான கலவரம் சில மாதங்களுக்கு முன்பு கட்டுக்குள் வந்தது. இப்போது திடீரென மீண்டும் மோதல் வெடிக்க ஆரம்பித்து விட்டது. கடந்த திங்கட்கிழமை மணிப்பூரின் ஜிரிபம் Jiribam மாவட்டத்தில் உள்ள போரோபெக்ரா Borobekra என்ற கிராம பகுதியில் கலவரம் நடந்தது. மெய்தி மக்களின் வீடுகள், அவர்கள் நடத்தி வரும் கடைகளுக்கு குக்கி சமூகத்தை சேர்ந்த ஆயுதம் ஏந்திய சில கலவரக்காரர்கள் தீ வைத்தனர். போலீஸ் ஸ்டேஷன், சிஆர்பிஎப் முகாமை சூறையாடினர். கலவரக்காரர்கள், சிஆர்பிஎப் வீரர்கள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. கலவரம் செய்த 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கலவரம் ஒரு பக்கம் நடந்த நிலையில் போரோபெக்ரா கிராமத்துக்குள் சில ஆயுதம் ஏந்திய கலவரக்காரர்கள் புகுந்தனர். துப்பாக்கி முனையில் 3 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 6 பேரை சுற்றி வளைத்தனர். 6 பேரையும் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். அனைவரும் மெய்தி சமூகத்தை சேர்ந்தவர்கள். போரோபெக்ரா கிராமம் மணிப்பூர், அசாம் எல்லையில் அமைந்துள்ளது. இரு மாநில எல்லையை பிரிக்கும் வகையில் அங்கு பாராக் என்ற நதி ஊடுகிறது. அந்த நதி வழியாக 6 பேரையும் கலவரக்காரர்கள் படகில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவம் மணிப்பூர் முழுதும் இருக்கும் மெய்தி சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கலவரக்காரர்கள் பிடித்து சென்றவர்களை எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் 5 நாள் கழித்து நேற்று ஆற்றின் கரையில் 3 பேர் பிணமாக கிடந்தனர். இன்று காலை மேலும் 3 பேர் சடலம் மீட்கப்பட்டது. கலவரம் நடந்த ஜிரிபம் மாவட்டம் முழுதும் பதற்றம் நிலவுவதால், 6 பேரின் சடலமும் பிரதே பரிசோதனைக்காக பக்கத்தில் உள்ள அசாம் மாநிலத்தின் சில்சார் பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டது. இறந்த 6 பேரும் கலவரக்காரர்களால் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட மெய்தி சமூகத்தினர் என்று தெரியவந்தது. இதை அதிகாரப்பூர்வமாக மணிப்பூர் அரசு தெரிவிக்கவில்லை. முதலில் கிடைத்தது பெண்கள் சடலம். அடுத்து கிடைத்தது குழந்தைகள் சடலம். பிறந்து 8 மாதமே ஆன குழந்தையையும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். ஹெரோஜித் என்ற அரசு ஊழியரின் மனைவி, மாமியார், 2 குழந்தைகள் இறந்தவர்கள் பட்டியலில் உள்ளனர். கலவரம் நடந்த அன்று நான் வெளியில் இருந்தேன். என் மனைவியிடம் இருந்த போன் வந்தது. தங்களை ஆயுதங்களுடன் சிலர் சுற்றி வளைத்து விட்டதாக சொன்னாள். அதற்குள் போன் கட் ஆகி விட்டது. மீண்டும் அழைத்தேன். அவளது போன் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்தது. அவசரமாக ஊருக்குள் ஓடி சென்று பார்த்தேன். என் மனைவி உட்பட 6 பேரை கலவரக்காரர்கள் படகில் ஏற்றி சென்றதாக என் மனைவியின் தோழி சொன்னார் என்று ஹெரோஜித் கூறி இருந்தார். மெய்தி சமூகத்தை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டது மணிப்பூர் பதற்றத்தை இப்போது உச்சத்துக்கு கொண்டு சென்று விட்டது. 6 பேர் கொலையை கண்டித்து மணிப்பூர் தலைநகர் இம்பால் மற்றும் இம்பால் பள்ளத்தாக்கு பகுதிகளில் போராட்டமும், கலவரமும் வெடித்தது. எம்எல்ஏக்களின் வீடுகளை குறி வைத்து மெய்தி சமூகத்தை சேர்ந்த சில கலவரக்காரர்கள் சூறையாடினர். 6 மாவட்டங்களில் பதற்றம் தொற்றியது. இன்னொரு பக்கம் பெண்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பதாகைகளுடன் ஊர்வலம் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்த போது தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது ஒரு பெண் ஆக்ரோஷமாக பேட்டி அளித்தார். அவர் கூறியது: நாங்கள் உச்சக்கட்ட மன அழுத்தத்தில் இருக்கிறோம். குழந்தைகள் உட்பட 6 பேரையும் கொன்று விட்டார்கள். இது ஈவு இரக்கமற்ற திட்டமிட்ட பயங்கரவாத செயல். 2 பெண்களுக்கு கொடுமை நடந்த போது மோடி மவுனம் கலைத்தார். இப்போது பெண்கள், குழந்தைகள் என 6 பேரை கொன்று விட்டார்கள். இதற்கு மோடி என்ன சொல்கிறார்? உள்துறை அமைச்சர் மணிப்பூருக்கு படைகளை அனுப்புகிறார். அந்த பயங்கரவாதிகளை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்படி என்றால் என்ன பயன் இருக்கிறது? மணிப்பூரில் இப்போது நடப்பது திட்டமிட்ட கொடூரமான இனப்படுகொலை. உங்களால் பயங்கரவாதிகளை தடுக்க முடியாவிட்டால் சொல்லி விடுங்கள். மணிப்பூர் மக்களாகிய நாங்களே எங்கள் மக்களையும், நிலத்தையும் காக்க சண்டை செய்கிறோம். ராணுவம், பாதுகாப்பு படை எங்களுக்கு தேவை இல்லை. எங்கள் திறமையை நாங்கள் காட்டிக்கொள்கிறோம் என்று ஆவேசமாக பேசினார்.