ரேஷன் மோசடிகளால் அரசுக்கு பெரும் இழப்பு! | Ration Shops | ration scams | Central Govt
ரேஷன் மோசடிகளால் அரசுக்கு பெரும் இழப்பு! | Ration Shops | ration scams | Central Govt உலக அளவில் மிகப்பெரிய ரேஷன் முறை நம் நாட்டில் நடைமுறையில் உள்ளது. 81.4 கோடி மக்களுக்கு அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆண்டுக்கு 5.24 கோடி டன் அரிசியும், 1.90 கோடி டன் கோதுமையும் மாநில அரசுக்கு அனுப்பப்படுகின்றன. இதில் 28 சதவீதம் அதாவது 2 கோடி டன் அரிசி மற்றும் கோதுமை பயனாளிகளை சென்றடைவதில்லை என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. 2022 ஆகஸ்டு முதல் 2023 ஜூலை வரை அரசு அனுப்பிய பொருட்கள் மற்றும் பயனாளிகள் பெற்ற பொருட்களின் அளவை ஒப்பிட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: ஆய்வு காலத்தில் 5.24 கோடி டன் அரிசி அனுப்பப்பட்டுள்ளது. அதில் 3.57 கோடி டன் மட்டுமே பயனாளிகளுக்கு சென்றுள்ளது. 32 சதவீத அரிசி பயனாளிகளுக்கு செல்லவில்லை. அதுபோல 1.90 கோடி டன் கோதுமை அனுப்பப்பட்டதில், 1.6 கோடி டன் மட்டுமே பயனாளிகளுக்கு கிடைத்துள்ளது. 15 சதவீதம் மடைமாற்றப்பட்டுள்ளது. இந்த இரண்டு தானியங்களில் 28 சதவீதம் அரசிடமிருந்து பயனாளிகளுக்கு செல்லும் வழியில் பலரால் அபகரிக்கப்பட்டுள்ளன. இப்படி மாயமாகும் பொருட்கள் வெளிச்சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. ஒரு ஆண்டில் மட்டும் மத்திய அரசுக்கு 69,109 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் குஜராத் காணாமல் போகும் தானியங்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன. ரேஷன் நடைமுறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால் ரேஷன் பொருட்கள் மோசடி வெகுவாக குறைந்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.