இம்ரான் படையை முறியடிக்க பாக் அரசு அதிரடி | Islamabad rally | PTI | Imran Khan | Pakistan tension
இம்ரான் படையை முறியடிக்க பாக் அரசு அதிரடி | Islamabad rally | PTI | Imran Khan | Pakistan tension பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், பிடிஐ எனப்படும் தெஹ்ரிக்-இ-இன்சாப் அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். 4 ஆண்டு பிரதமராக இருந்து பாகிஸ்தானை ஆட்சி செய்த இம்ரான், 2022ல் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தார். அவரது ஆட்சி கவிழ்ந்தது. முறைகேடு, சட்ட விரோத திருமணம் என பல்வேறு வகையான வழக்குகள் இம்ரான் மீது தொடுக்கப்பட்டன. முறைகேடு வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஓராண்டுக்கு மேலாக இம்ரான் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். தேர்தலில் போட்டியிடவும் இம்ரான் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், பிப்ரவரியில் நடந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட இம்ரான் கட்சியினர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று அசர வைத்தனர். ஆனால் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், அவர்களால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்தபடி போராட்டத்துக்கு இம்ரான் அழைப்பு விடுத்தார். தன்னை விடுவிக்கக்கோரி கட்சியினர் இறுதிக்கட்ட போராட்டத்தை நடத்த வேண்டும் என்றும் என்று அறிவித்தார். அதன்படி, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி செல்வது என்று இம்ரானின் பிடிஐ கட்சி முடிவெடுத்தது. இம்ரான் கட்சி வலுவாக இருக்கும் ஹைபர் பக்துன்க்வா khyber pakhtunkhwa மாகாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி பேரணி துவங்கியது. இதனால் இஸ்லாமாபாத் முழுதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் கும்பலாக கூட அரசு தடை விதித்தது. நகர் முழுதும் போலீசார், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். ஆனால் பைக், கார், சரக்கு வாகனங்கள் என பல வண்டிகளில் இஸ்லமாபாத் நோக்கி பிடிஐ கட்சியினர் வெவ்வேறு இடங்களில் பேரணியாக அணிவகுத்தனர். இஸ்லாமாபாத்துக்கு முன்னால் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பதற்றம் நிலவியது. சில இடங்களில் வன்முறை வெடித்தது. போலீஸ் ஏற்படுத்தி வைத்திருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு இஸ்லாமாபாத்துக்குள் இம்ரான் கட்சியினர் முன்னேறினர். அப்போது கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசினர். பதிலுக்கு பிடிஐ கட்சியினர் கலரவத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் வெடிமருந்து, துப்பாக்கி போன்ற ஆயுதங்களையும் பயன்படுத்தினர். அவர்கள் நடத்திய தாக்கதலில் 100க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு படையினர் காயம் அடைந்தனர். 4 பாதுகாப்பு படை வீரர்கள், 2 போலீசார் கொல்லப்பட்டனர். கலவரத்தை ஒடுக்க இஸ்லாமாபாத்தில் ராணுவம் குவிக்கப்பட்டது. கலவரக்காரர்களை கண்டதும் சுட பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. பதற்றத்தை தணிக்கவும், வதந்தி பரவுவதை தடுக்கவும் இன்ஸ்டா, பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களை பாகிஸ்தான் அரசு தற்காலிகமாக முடக்கியது. பல இடங்களில் இணைய சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இம்ரான் கட்சி நடத்தும் போராட்டம் சட்ட விரோதம் என்று பாகிஸ்தான் உள் துறை எச்சரித்துள்ளது. தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் பதற்றம் நீடிக்கிறது.