பதவிக்காலம் முடியும் 27 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு சிறப்பு அலுவலர்கள் | Local government elections
கடந்த அதிமுக ஆட்சியில், காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, வேலுாரில் இருந்து திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலியில் இருந்து தென்காசி என புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த 9 மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களில் உள்ள 1.19 லட்சம் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு 2019ல் தேர்தல் நடந்தது. ஆட்சி மாற்றத்திற்கு பின், மற்ற மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு, 2021ல் தேர்தல் நடத்தப்பட்டது. 2019ல் பொறுப்பேற்ற உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம், 2025 ஜனவரி 5ம் தேதியுடன் முடிகிறது. 2021ல் பொறுப்பேற்ற மாவட்ட ஊரக உள்ளாட்சிகள் பதவிக் காலம், 2026 செப்டம்பரில் முடிகிறது. அனைத்து மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கும் ஒருங்கிணைந்த தேர்தல் நடத்தப்படுமா அல்லது பதவிக் காலம் முடிந்த 27 மாவட்டங்களுக்கு மட்டும் முதலில் தேர்தல் நடத்தப்படுமா என்ற குழப்பம் நிலவி வருகிறது. பதவிக் காலம் முடியவுள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட உள்ளன.