பதவி ஏற்பு விழாவிலும் பாஜ, இண்டி கூட்டணி மோதல் Maharashtra Assembly news|
பதவி ஏற்பு விழாவிலும் பாஜ, இண்டி கூட்டணி மோதல் Maharashtra Assembly news| Maharashtra MLAs Swearing in ceremony| Shiv Sena UBT| BJP மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜ கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. முதல்வராக தேவேந்திர பட்னவிசும், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் பதவியேற்றனர். இந்நிலையில், புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்க வசதியாக, இன்று முதல் மூன்று நாட்களுக்கு மகாராஷ்ட்ர சட்டசபை சிறப்பு கூட்டம் நடக்கிறது. முதல் நாளான இன்று பாஜ, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் பதவியேற்றனர். பிறகு, முதல்வர், துணை முதல்வர்கள் சட்டசபை வளாகத்தில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்தினர். நாளையும் பதவியேற்பு நிகழ்வு தொடரும் என்பதால், மீதமுள்ளவர்கள் நாளை பதவியேற்பர். மகாராஷ்டிரா சட்டசபையில் மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜவுக்கு 132 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆளும் கூட்டணியில் உள்ள சிவசேனாவுக்கு 57 எம்எல்ஏக்களும், தேசியவாத காங்கிரசுக்கு 41 எம்எல்ஏக்களும் உள்ளனர். எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரசுக்கு 16, சிவசேனா உத்தவ் பிரிவுக்கு 20, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவுக்கு 10 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், சிவசேனா உத்தவ் பிரிவு, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவை சேர்ந்த எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்பு விழாவை புறக்கணித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பதவி ஏற்பு விழாவை புறக்கணித்ததற்கான காரணம் குறித்து, சிவசேனா உத்தவ் பிரிவு எம்எல்ஏ ஆதித்யா தாக்கரே கூறியதாவது: இந்த தேர்தலில் மக்களின் எண்ணத்திற்கு மாறாக முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவு மகாராஷ்டிரா மக்களின் மனநிலையை பிரதிபலிக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்பர். ஆனால், மகாராஷ்டிராவில் எந்த கொண்டாட்டமும் இல்லை. இது இவிஎம் மிஷின் கொடுத்த வெற்றி. இந்த தேர்தலில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. ஜனநாயக படுகொலை நடந்துள்ளது. எனவே தான் எங்கள் அதிருப்தியை பதிவு செய்யும் வகையில் பதவி ஏற்பு விழாவை புறக்கணித்தோம் என ஆதித்யா தாக்கரே கூறினார். ஆதித்யா தாக்கரேவின் குற்றச்சாட்டுக்கு, துணை முதல்வர் அஜித் பவார் பதில் அளித்தார். இவர்கள் இப்படி வெறுமனே குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. சந்தேகம் இருந்தால் தேர்தல் ஆணையத்தில் முறையிட வேண்டும். அங்கும் திருப்திகரமான முடிவு கிடைக்கவில்லை என்றால் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும் என அஜித் பவார் கூறினார்.