காங்கிரசை ஓரம் கட்டும் கூட்டணி கட்சிகள்? Mamata Speech about INDIA Block Presidency|
காங்கிரசை ஓரம் கட்டும் கூட்டணி கட்சிகள்? Mamata Speech about INDIA Block Presidency| மத்தியில் ஆளும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ், திரிணாமுல் காங், கம்யூனிஸ்ட்கள், சிவசேனா உத்தவ் கட்சி, தேசியவாத காங் சரத் பாவர் கட்சி, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ராஷ்டிரீய ஜனதாதளம், திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இண்டி கூட்டணியை உருவாக்கின. மத்தியில் பாஜ கூட்டணியை எதிர்ப்பதில் ஒன்றுபடும் இக்கட்சிகள், தங்கள் மாநிலங்களில், ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்கின்றன. கேரளாவில் காங் - கம்யூ, மேற்கு வங்கத்தில் காங் - கம்யூ, டில்லியில் ஆம் ஆத்மி - காங், பஞ்சாப், ஹரியானாவில், ஆம் ஆத்மி - காங் என மாநில அரசியல் விவகாரத்தில் இண்டி கூட்டணியில் விரிசல் ஏற்படுகிறது. இதனால், தேசிய அளவில் அரசியல் செய்யும்போதும், கட்சி நிர்வாகிகளுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இது பாஜ கூட்டணிக்கு சாதகமாக அமைந்துவிடுவதால், அந்த கட்சி தொடர்ந்து வெற்றிகளை குவிக்கிறது. இந்த நிலையில், இண்டி கூட்டணிக்கு சரியான தலைமை தேவை. அதை சரியாக வழி நடத்த வேண்டும் என மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். இண்டி கூட்டணியை துவங்கியது நானே. அந்த கூட்டணி சரியான பாதையில் பயணிக்க சரியான தலைமை தேவை. அந்த பொறுப்பை நான் ஏற்க தயார். ஆனால் அதற்காக மேற்கு வங்கத்திற்கு வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கிருந்தபடியே என்னால் இண்டி கூட்டணியை வழிநடத்த முடியும் எனவும் மம்தா கூறியுள்ளார். கூட்டணிக்கு தலைமை ஏற்படுத்துவது குறித்த மம்தாவின் பேச்சு, இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தேசிய கட்சி என்ற அந்தஸ்த்துடன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு, மிகப் பெரிய சவாலை ஏற்படுத்தும் வகையில் மம்தா பேசியுள்ளதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இண்டி கூட்டணியில் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. எனவே கூட்டணி தலைமை குறித்து அனைத்து கட்சிகளுடன் பேச்சு நடத்தியே முடிவெடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி தாரிக் அன்வர் கூறினார். இண்டி கூட்டணியில் இருந்தபோது ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதிஷ் குமாரும் கூட கூட்டணிக்கு தலைமை தாங்க எண்ணினார். அந்த வகையில் மம்தா தன் விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார். கூட்டணி தலைமை பற்றி எல்லா கட்சிகளும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும். இது தனி நபர் விருப்பத்திற்கு உட்பட்டதல்ல என காங்கிரஸ் மூத்த தலைவர் ரஷித் அல்வி கூறியுள்ளார். இது பற்றி லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலிடம் முதலில் பேச வேண்டும் என, காங் எம்பி தனுஜ் புனியா கூறினார். மம்தா பானர்ஜி மூத்த அரசியல் தலைவர். அவருக்கு நிறைய அனுபவம் உள்ளது. தலைமை பொறுப்புக்கு அவர் தகுதியானவர். இண்டி கூட்டணி தலைவர்கள் கலந்தாலோசித்து விரைவில் முடிவெடுக்க வேண்டும். அப்படி ஒரு முடிவெடுத்தால் நாங்கள் அதை வரவேற்போம் என சமாஜ்வாதி மூத்த தலைவர் உதய்வீர் சிங் கருத்து தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் காங்கிரசின் செயல்பாடு குறிப்பிடும்படியாக இல்லை. அவர்கள் ஆளும் ஹிமாச்சலில் அனைத்து இடத்திலும் தோல்வி அடைந்தனர். கர்நாடகாவில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் தோல்வி. மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது இண்டி கூட்டணியின் தலைமை பற்றி யோசிக்க வேண்டியுள்ளது. கூட்டணி கட்சிகள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என, சமாஜ்வாதி மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் கூறியுள்ளார். மம்தா என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், பாஜவை அகற்றுவோம், தேசம் காப்போம் என்பதே இண்டி கூட்டணியில் பொது முழக்கமாக உள்ளது. எல்லா மாநிலங்களிலும் நிலைமை ஒரே மாதிரியாக இல்லை என மார்க்சிஸ்ட் தலைவர் டி.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். அவர் மம்தாவின் கருத்தை ஆமோதிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. மம்தா பானர்ஜி ஒரு வெற்றிகரமான தலைவர். திரிணாமுல் காங் இண்டி கூட்டணியில் முக்கிய அங்கம். கூட்டணியில் மேலும் அதிக பொறுப்புகளை மம்தா ஏற்க விரும்பினால் அதை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என தேசியவாத காங் சரத் பவார் பிரிவு தலைவர் சுப்ரியா சுலே கூறி இருக்கிறார்.. சிவசேனா உத்தவ் கட்சியை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதியும் மம்தாவுக்கு ஆதரவான கருத்தையே முன் வைத்துள்ளார். இப்படி இண்டி கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் மம்தாவின் தலைமையை ஏற்க தயாராகி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் பலரும் அதை ஏற்க மனமில்லாத வகையில் பேசுகின்றனர். கம்யூனிஸ்ட்களோ எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலை கருத்துக்களை வெளியிடுகின்றனர். இதனால் கூட்டணி தலைமை குறித்த மம்தாவின் பேச்சு இண்டி கூட்டணியில் பேசுபொருளாக மாறி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.