பெங்களூருவை ஐடி நகரம் ஆக்கியவர் மறைந்தார்! S.M.Krishna | Karnataka | BJP | Bengaluru
கர்நாடகாவை சேர்ந்த மூத்த பா.ஜ தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா உடல் நிலை சரியில்லாமல் பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன் அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை 2:45 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் காலமானார். அவருக்கு வயது 93. மாண்டியாவின் சோமனஹள்ளி கிராமத்தில் 1932ம் ஆண்டு மே 1ம் தேதி பிறந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. மைசூரு ராமகிருஷ்ணா வித்யாசாலாவில் பள்ளி படிப்பை முடித்து, மஹாராஜா கல்லுாரியில் பி.ஏ இளங்கலை முடித்தார். பின் பெங்களூரு அரசு சட்ட கல்லூரியில் சட்டபடிப்பு படித்தார். அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்தார். பின் இந்தியாவுக்கு வந்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டது. இதனால் 1962ல் மாண்டியாவின் மத்தூர் சட்டசபை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரசின் சங்கர் கவுடாவுக்கு, அப்போதைய பிரதமர் நேரு பிரசாரம் மேற்கொண்டும், எஸ்.எம்.கிருஷ்ணா வெற்றி பெற்று, சட்டசபைக்குள் கால் பதித்தார். கர்நாடக சட்டசபை சபாநாயகராக 1989 முதல் 1993 வரையிலும்; வீரப்ப மொய்லி முதல்வராக இருந்த போது 1993 முதல் 1994 வரை துணை முதல்வராகவும் பதவி வகித்தார். பின் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் 1999 அக்டோபர் 11ம் தேதி, கர்நாடகாவின் 10வது முதல்வராக பதவி ஏற்றார். இவரது ஆட்சி காலத்தில் தான், பெங்களூரு நகர வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தந்தார். இதனால் பெங்களூரில் ஏராளமான பன்னாட்டு மென் பொருள் நிறுவனங்கள் கால் பதித்தன. ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. தகவல் தொழில்நுட்ப துறையில் அசுர வளர்ச்சி பெற்றது. மாநிலத்தின் பொருளாதாரம் உயர்ந்தது. பல நாடுகளின் நிறுவனங்கள் ஒன்றன் பின், ஒன்றாக முதலீடு செய்தன. இதனால், சர்வதேச அளவில், பெங்களூரு நகருக்கு ஐ.டி சிட்டி என்ற பெயர் வந்தது. அன்று முதல், இப்போது வரை பெங்களூரு அந்த பெயர் தக்க வைத்து கொள்கிறது. பின் மஹாராஷ்டிரா கவர்னராக ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தார். அடுத்ததாக மன்மோகன்சிங் ஆட்சியில், மத்திய வெளியுறவு துறை அமைச்சராக பணியாற்றினார். அதன் பின் அவருக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் தரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்து, 2017ல் பா.ஜ.வில் இணைந்தார். மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய திட்டங்களை தீட்டிய எஸ்.எம்.கிருஷ்ணா மறைவு கர்நாடகாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.