தேர்தலில் அம்பேத்கரை தோற்கடித்தது காங்கிரஸ்: கிரண் ரிஜுஜு பேச்சு Parliament adjourned | Amit shah s
தேர்தலில் அம்பேத்கரை தோற்கடித்தது காங்கிரஸ்: கிரண் ரிஜுஜு பேச்சு Parliament adjourned | Amit shah speech about Ambedkar | Congress Protest பார்லிமென்ட்டில் நேற்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இன்று லோக்சபா, ராஜ்யசா கூடியதும் இரு சபைகளிலும் கூச்சல், குழப்பம் நிலவியது. ராஜ்யசபாவில் நேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். அம்பேத்கர் பற்றிய கருத்துக்களுக்கு அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என குரல் எழுப்பினர். காங்கிரஸ் தான் அம்பேத்கரை அவமதித்தது. பாஜ அவரை போற்றுகிறது என, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் லோக்சபாவில் பேசினார். அவரை பேச விடாமல் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், சபை கூடிய சற்று நேரத்திலேயே மதியம் 2 மணி வரை லோக்சபாவை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இந்நிலையில், ராஜ்யசபாவிலும் அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பார்லிமென்ட் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பேசினார். உண்மையில் அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் தான். அவரின் ஆயுள் காலத்துக்கு பிறகும் கூட பாரத ரத்னா வழங்காமல் இருந்தது காங்கிரஸ் அரசு தான். அம்பேத்கரை பொதுத் தேர்தலில் தோற்கடித்தது காங்கிரஸ். அவர் விதர்பாவில் நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்ட போதும் கூட, காங்கிரஸ் அவரை தோற்கடித்தது. அந்த தேர்தலில் அவர் வென்றிருந்தால், 1952க்கு பிறகும் கூட அம்பேத்கர் பார்லிமென்ட்டில் இருந்திருப்பார். நான் அம்பேத்கர் வழியில் புத்த மதத்தை கடைபிடிப்பவன். 1951க்கு பின், 71 ஆண்டுகள் கழித்து மத்திய அமைச்சரவையில் புத்த மதத்தை கடைபிடிக்கும் ஒருவருக்கு சட்ட அமைச்சர் பதவி வழங்கியது பிரதமர் மோடி தான். இப்படி இருக்கையில் இவர்கள் அம்பேத்கரை போற்றுவதாக கூறுவது எந்த வகையில் நியாயம். உண்மையில் அம்பேத்கர் வழியை கடைபிடிப்பதும் அவரை போற்றுவதும் பாஜ தான் என ரிஜுஜு பேசினார். மத்திய அமைச்சரின் பேச்சை தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், ராஜ்யசபாவும் பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அமித் ஷா பேசியது என்ன என்பதை பார்க்கலாம். அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதின் 75ம் ஆண்டை போற்றும் வகையில் ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில் அமைச்சர் அமித் ஷா நேற்று பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் ஆட்சியாளர்களை கடுமையாக தாக்கி பேசினார். முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா ஆகியோர் அரசியல் சாசனத்தை உடைத்ததாக குற்றம்சாட்டினார். தற்போது வார்த்தைக்கு வார்த்தை அம்பேத்கர், அம்பேத்கர் எனும் காங்கிரசார், உண்மையில் அவரை மதிக்கவில்லை, அவமானப்படுத்தினார்கள். அம்பேத்கர், அம்பேத்கர் என கூறுவதற்கு பதில், அவர்கள் கடவுள் பெயரை உச்சரித்திருந்தால், சொர்க்கம் கிடைத்திருக்கும் என அமித் ஷா பேசினார். அவரின் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இன்று பார்லிமென்டின் இரு சபைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். பார்லிமென்ட் வளாகத்தில் அம்பேத்கர் படத்துடன் நின்று அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.