அடுத்த மாதத்தில் பிரசாரத்தை துவக்க இபிஎஸ் திட்டம்! EPS | ADMK | 2026 Election
அடுத்த மாதத்தில் பிரசாரத்தை துவக்க இபிஎஸ் திட்டம்! EPS | ADMK | 2026 Election தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. இந்நிலையில் 2026ல் ஆட்சியை கைப்பற்ற அடுத்த மாதத்தில் இருந்தே தொகுதிவாரியாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டு உள்ளார். பூத் அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும்; அதற்கான நிர்வாகிகளை நியமித்து கிளை, வட்டம், பகுதி, மாவட்டச் செயலர்கள் கண்காணிக்க வேண்டும் என கட்சியினருக்கு அறிவுறுத்தி உள்ளார். பன்னீர்செல்வம், தினகரன் அணிகளின் தனி ஆவர்த்தனம், பா.ஜ.வுடன் கூட்டணி முறிவு, நடிகர் விஜய் அரசியல் வருகை போன்ற காரணங்களால், அ.தி.மு.க.வின் ஓட்டு வங்கியை அதிகரிக்க களப்பணியில் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. இதுகுறித்து சமீபத்தில் நடந்த கட்சி பொதுக்குழு கூட்டத்திலும் பேசியுள்ளார். இதையடுத்து அடுத்த மாதம் தை அமாவாசைக்கு பின், ஜனவரி 29 அல்லது 30ல் தேர்தல் பிரசாரத்தை இபிஎஸ் துவக்குகிறார். ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் பிரசாரத்துக்கு செல்லாமல், தேர்தல் தேதி அறிவிப்பு வரை பல கட்டங்களாக செல்ல திட்டமிட்டுள்ளார். தன் நிகழ்ச்சி நிரல் பிரசாரமாக மட்டும் அமையாமல், ஆர்ப்பாட்டம், போராட்டம் என தி.மு.க. அரசுக்கு எதிராக அன்றைக்கு உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வகையில் நிகழ்ச்சி நிரலை அமைக்க, கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்பே, கூட்டணி முடிவாகும் என்பதால், தற்போதைக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகளை மட்டுமே குறிவைத்து பேச, பழனிசாமி முடிவு செய்துள்ளதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் கூறுகின்றன.