உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராமதாஸ் - அன்புமணி மோதல்; நிர்வாகிகள் சொல்வது என்ன? | Ramadoss | Anbumani | PMK

ராமதாஸ் - அன்புமணி மோதல்; நிர்வாகிகள் சொல்வது என்ன? | Ramadoss | Anbumani | PMK

ராமதாஸ் - அன்புமணி மோதல்; நிர்வாகிகள் சொல்வது என்ன? | Ramadoss | Anbumani | PMK புதுச்சேரி அருகே நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சி நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனான கட்சித் தலைவர் அன்புமணிக்கும், நேரடியாக நடந்த காரசார பேச்சு மோதல் நடந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து பார்ப்போம். பாமக இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி 2022ல் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவரானதும் பேசிய அன்புமணி, தமிழக அரசியலில் பாமகவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல பாமக - 2.0 என்ற திட்டத்தை செயல்படுத்துவேன் என்றார். மாவட்ட அளவில் சுற்றுப்பயணமும் மேற்கொண்டார். ஆனால், கட்சி தலைவராகி இரண்டரை ஆண்டுகளாகியும், ராமதாசிடம் இருந்து எந்த அதிகாரமும் அன்புமணிக்கு வரவில்லை. மகன் தலைவரான பின்னும், ராமதாஸ் வழக்கம்போல திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் இருந்து கட்சியை நடத்தி வருகிறார். ஒன்றிய அளவிலான நிர்வாகிகளை கூட அவரே நியமனம் செய்கிறார். இதனால், தந்தை மீது அன்பு மணி கடும் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று நடந்த பாமக பொதுக் குழுவில், தன் மூத்த மகளின் மகன் முகுந்தனை இளைஞர் சங்க தலைவராக ராமதாஸ் நியமித்தார். இது அன்புமணியை அதிர்ச்சி அடைய செய்தது. இதனால், மேடையிலேயே இருவருக்கும் சொற்போர் நடந்தது. இது தொடர்பாக பாமக நிர்வாகிகள் கூறியதாவது: அன்புமணி தலைவரான அதே மேடையில், ஜிகே மணியை கவுரவ தலைவராக ராமதாஸ் நியமித்தார். தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அறிவித்ததால் அன்புமணி கடும் அதிருப்தி அடைந்தார். அந்த அதிர்ச்சி விலகுவதற்குள் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனை பாமக இளைஞரணி தலைவராக ராமதாஸ் நியமித்தார். இனி இப்படியே விடக்கூடாது என, தந்தையிடம் நேரடியாக வாக்குவாதம் செய்து தமிழ்க்குமரனை அப்பதவியில் இருந்த விலக செய்தார். கடந்த லோக்சபா தேர்தலில் தர்மபுரியில் மனைவி சவுமியாவை போட்டியிட வைக்கவும் அன்புமணி நீண்ட போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. ராமதாசை பொறுத்தவரை மகனுக்கு மட்டுமல்ல. இரு மகள்களின் குடும்பத்திலிருந்தும் தலா ஒருவருக்கு கட்சியில் பதவி கொடுக்க நினைக்கிறார். ஆனால் குடும்பத்திலிருந்து தன்னை தவிர யாரும் அரசியலுக்கு வர வேண்டாம் என்பது அன்புமணியின் பிடிவாதம். மகள்களின் பாசத்திற்கு ராமதாஸ் கட்டுப்படுவது அன்புமணிக்கு சிக்கலாக இருக்கிறது. இது தான் தந்தை மகன் மோதலுக்கு காரணம் என அவர்கள் கூறினர். இதுவரை நான்கு சுவர்களுக்குள் நடந்து வந்த ராமதாஸ், அன்புமணி மோதல், இப்போது பொதுக்குழு மேடையில் வெடித்திருப்பதும், பொதுக்குழு அரங்கிலேயே நிர்வாகிகள் இரு பிரிவாகப் பிரிந்து கோஷமிட்டதும் ஒட்டுமொத்த பாமக நிர்வாகிகள், தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துஉள்ளது.

டிச 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !