உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராஜஸ்தானில் போர்வெல் போடும்போது அதிசயம் | Jaisalmer | Rajasthan | Borewell

ராஜஸ்தானில் போர்வெல் போடும்போது அதிசயம் | Jaisalmer | Rajasthan | Borewell

ராஜஸ்தானில் போர்வெல் போடும்போது அதிசயம் | Jaisalmer | Rajasthan | Borewell ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் பகுதியில் வசித்து வருபவர் விக்ரம் சிங். இவருக்கு சொந்தமான நிலத்தில் சமீபத்தில் போர் போடும் பணிகள் நடந்தது. கிட்டத்தட்ட 850 அடி ஆழத்துக்கு போர் போடப்பட்டது. அப்போது திடீரென பலத்த ஓசையுடன் நிலத்தில் இருந்து தண்ணீர் கொப்பளிக்க ஆரம்பித்தது. சுமார் 3 அடி உயரத்துக்கு பெரும் சத்தத்துடன் வெள்ளம் போல பூமிக்குள் இருந்து தண்ணீர் சீறி பாய ஆரம்பித்தது. இதனால் உண்டான வெள்ளத்தில் போர்வெல் லாரி, போர் போட பயன்படுத்திய இயந்திரங்கள் சிக்கின. அவை மீட்க முடியாத அளவுக்கு மண்ணில் புதைந்தது. தொடர்ந்து போர் குழியில் இருந்து பாய்ந்த நீரினால் அங்குள்ள வயல்வெளியே ஏரி போல மாறியது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. வறண்ட பாலைவன பூமியில் இப்படி ஒரு அதிசயமா என்று ஊர்மக்கள் ஆச்சரியம் அடைந்து அங்கே திரள ஆரம்பித்தனர். இதுகுறித்து வருவாய்துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ பகுதிக்கு சென்ற அதிகாரிகள் அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தனர். தொடர்ந்து பூமியில் இருந்து நீர் பிய்ச்சியடித்தபடி வந்து கொண்டே இருந்தது. அதன் தீவிரத்தை உணர்ந்து போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு திரள ஆரம்பித்தனர். இதையடுத்து சம்பவம் நிகழ்ந்த பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு மனிதர்களோ, கால்நடைகளோ நடமாட தடை விதித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். போர் அமைந்துள்ள பகுதியில் தற்காலிகமாக போலீஸ் செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. அதிசயம் நடந்த இடம் பழமையான சரஸ்வதி நதி நீரோட்டம் பெற்ற பகுதியாக இருக்கலாம் என்று பலரும் கருதுகின்றனர். இந்து மத்தில் மிக முக்கிய இடம் பெற்றுள்ள சரஸ்வதி நதி யமுனைக்கு கிழக்கிலும், சட்லெஜ் நதிக்கு மேற்கிலும் பாய்ந்ததாக வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலப்போக்கில் புவியியல் மாற்றங்களால் சரஸ்வதி நதி பாலைவனத்தில் வறண்டு விட்டதாகவும், மகாபாரதம் உள்ளிட்ட புராணங்கள் தெரிவிக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளா நடக்கும் திரிவேணி சங்கமத்தில் கங்கை, யமுனை நதிகளுடன் கண்ணுக்கு புலப்படாத வகையில் சரஸ்வதி நதி வந்து கலக்கிறது என இந்துக்கள் நம்புகின்றனர். இமய மலையில் தோன்றி பஞ்சாப், ஹரியானா வழியாக ராஜஸ்தான் பாலைவனத்தில் மறையும் பருவகால ஆறான காகர் நதியே சரஸ்வதி நதியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் செயற்கைக்கோள் தரவுகளை வைத்து பார்க்கும் போது பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் பகுதிகளில் சரஸ்வதி நதி பாய்ந்த ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆய்வுகளுக்காக 2002ல் ஆண்டில் அப்போதைய பாஜ அரசு சார்பில் சரஸ்வதி பாரம்பரிய மீட்பு திட்டம் உருவாக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் பின்னர் வந்த காங்கிரஸ் அரசு அத்திட்டத்தை அறிவியலுக்கு முரணானது என கூறி கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

டிச 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ