கோவை கண்காட்சியில் வரிசை கட்டிய காங்கேயம் காளைகள்
கோவை கண்காட்சியில் வரிசை கட்டிய காங்கேயம் காளைகள் கோவை அடுத்த சூலுார் அருகே சக்தி இன்ஜினியரிங் கல்லுாரியில், கிராமிய பண்பாடு மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், சிறப்பு கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பிரமாண்டமான முறையில் நடந்த வேளாண் திருவிழாவில், சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய கலை திறமையை சிறுவர்கள் வெளிப்படுத்தினர். பாரம்பரிய வீட்டு விலங்குகள் பற்றி இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், காங்கேயம் காளைகள், எருமை மாடுகள், பசு மாடுகள், நாய்கள், ஆடுகள் கண்காட்சியில் இடம் பெற்றன. விழாவையொட்டி, சேவல் சண்டை, கிடாரி போட்டி, ரேக்லா ரேஸ், குதிரை பந்தயம் நடத்தப்பட்டது. 30க்கும் மேற்பட்ட பல்வேறு இன காளைகள், மாடுகளை பார்த்து கல்லுாரி மாணவ, மாணவியர் வியப்படைந்தனர். அவர்களுக்கு காளைகளின் இனம், வகைகள் குறித்து விளக்கப்பட்டது. நாய், ஆடு, கோழி, சேவல் போன்றவற்றின் வகைகள் குறித்தும் விளக்கப்பட்டது. வேளாண்மை, கிராமிய வாழ்க்கை, பாரம்பரிய பயிர் வகைகள் குறித்த கருத்தரங்கும் நடைபெற்றது. விழாவில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் பங்கேற்றனர்.