சென்னையில் 258 கிலோ கடத்தல் தங்கம் சிக்கிய பகீர் பின்னணி | chennai gold smuggling | chennai airport
சென்னையில் 258 கிலோ கடத்தல் தங்கம் சிக்கிய பகீர் பின்னணி | chennai gold smuggling | chennai airport வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்காக சிண்டிகேட் அமைத்து பலர் செயல்படுகின்றனர். உள்நாட்டில் வரி விதிக்கப்பட்ட தங்கத்தின் விலை அதிகம் என்பதால், வெளிநாடுகளில் இருந்து கடத்திவந்து கள்ளச் சந்தையில் விற்பர். இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. கிலோ கணக்கிலான தங்கத்தை, பெரும்பாலும் விமானங்கள் அல்லது கப்பல் வாயிலாவே கடத்துகின்றனர். இதை தடுத்து, நடவடிக்கை எடுக்கும் வகையில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் செயல்பட்டு வருகின்றன. இதன் கீழ், சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலானய்வு துறை செயல்படுகிறது. இந்தியாவில் உள்ள முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் சென்னையும் ஒன்று. இங்கு மலேசியா, சிங்கப்பூர், பாங்காக், துபாய், சார்ஜா, அபுதாபி என பல நாடுகளில் இருந்து தங்கம் கடத்திவரப்படுகிறது. சென்னை ஏர்போர்ட்டில் 2024ம் ஆண்டில் மட்டும் 175 கோடி ரூபாய் மதிப்பிலான 258 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இது 2023ம் ஆண்டை விட குறைவு என அதிகாரிகள் தெரிவித்தனர். 2023ல் 218 கோடி ரூபாய் மதிப்பிலான, 303 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்க கடத்தல் குறித்து சுங்கத்துறை உயர் அதிகாரிகள் கூறியது: சென்னை விமான நிலையத்தில் ஆண் பயணியர் மட்டுமின்றி, கடத்தலில் பெண் பயணியரும் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல் படி, தங்கம் மற்றும் போதை பொருட்கள் கடத்தலை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், விமான நிலைய சுங்க பிரிவில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கையை கடந்தாண்டு முதல் அதிகரித்துள்ளோம். இதன் காரணமாக எளிதில் தப்பிக்க முடியாமல் பலர் சிக்கினர். குறிப்பாக, வெளிநாட்டில் இருந்து வந்து உள்நாட்டு விமானங்களில் மாறி பயணிப்போர் வாயிலாக நடக்கும் கடத்தலையும் கண்காணித்து வந்தோம். இதானால், பெருமளவு கடத்தல் தடுக்கப்பட்டது. தவிர, சுங்க வரி குறைப்பால், பெரியளவில் தங்கம் கடத்தும் செயலும் குறைந்து வருகிறது என்றனர்.