உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உலக நாடுகளை வாய்பிளக்க வைத்த இஸ்ரோ சாதித்தது என்ன SpaDeX | space docking experiment | ISRO spadex

உலக நாடுகளை வாய்பிளக்க வைத்த இஸ்ரோ சாதித்தது என்ன SpaDeX | space docking experiment | ISRO spadex

உலக நாடுகளை வாய்பிளக்க வைத்த இஸ்ரோ சாதித்தது என்ன SpaDeX | space docking experiment | ISRO spadex பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி என்ற 2 செயற்கைகோள்களை டிசம்பர் 30ம் தேதி விண்ணில் ஏவிய இஸ்ரோ, இப்போது அந்த மிஷனில் சரித்திர சாதனை படைத்திருக்கிறது. நாடே எதிர்பார்த்து காத்திருந்த டாக்கிங் என்னும் செயற்கைகோள்கள் ஒன்று சேரும் நிகழ்வை விண்வெளியில் வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டி சாதித்து இருக்கிறது இஸ்ரோ. ஸ்பேடெக்ஸ் திட்டம் டிசம்பர் 30ம் தேதி செயல்பாட்டுக்கு வந்தது. அன்று இரவு ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டபடி ராக்கெட்டில் இருந்து பிரிந்த செயற்கைகோள்கள் கச்சிதமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன. ராக்கெட் புறப்பட்ட 15 நிமிடம் 15 வினாடியில் ஸ்பேடெக்ஸ் ஏ 475 கிலோ மீட்டரிலும், 15 நிமிடம் 20 வினாடியில் ஸ்பேடெக்ஸ் பி 476 கிலோ மீட்டரிலும் வெவ்வேறு சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தப்பட்டன. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் முக்கிய நோக்கம் வெவ்வேறு சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்திய 2 செயற்கைகோள்களையும் விண்ணில் ஒன்றிணைத்து பார்ப்பது தான். இந்த விண்வெளி வித்தையை இஸ்ரோ கற்று விட்டால் அது மிகப்பெரிய வெற்றி. ஏனென்றால், பிற்காலத்தில் நிலவு மற்றும் இதர கோள்களுக்கு மனிதனை அனுப்பும் போதும், விண்வெளியில் இஸ்ரோவுக்கான ஆய்வு மையத்தை துவங்கும் போதும் இந்த வித்தை பெரிய அளவில் கை கொடுக்கும். உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மட்டுமே இந்த வித்தையில் கைதேறி இருக்கின்றன. இதனால் தான் டாக்கிங் சோதனையை இஸ்ரோ ஒரு சவாலாக எடுத்து செய்தது. டிசம்பர் 30ம் தேதிக்கு பிறகு மூன்று முறை ஸ்பேடெக்ஸ் ஏ, பி செயற்கைகோள்களை ஒன்றிணைக்க முயற்சி செய்தது இஸ்ரோ. நான்காவது முறையாக இன்று நடந்த சோதனையில் வெற்றிகரமாக 2 செயற்கைகோள்களும் விண்வெளியில் ஒன்று சேர்ந்தன. முதலில் செயற்கைகோள்களுக்கான இடைவெளி 230 மீட்டரில் இருந்து 15 மீட்டராக குறைக்கப்பட்டது. பின்னர் 3 மீட்டராக குறைத்தனர். அதன் பிறகு வினாடிக்கு 10 மில்லி மீட்டர் வேகத்தில் 2 செயற்கைகோள்களும் ஒன்றை ஒன்று நோக்கி நெருங்கின. இறுதியில் வெற்றிகரமாக ஒன்று சேர்ந்து டாக்கிங் சோதனை வெற்றி பெற்றது. இதை முறைப்படி இஸ்ரோ அறிவித்தது. இனி வெற்றிகரமாக செயற்கைகோள்கள் பிரிந்து வரும் சோதனை நடக்கும். டாக்கிங் சோதனையில் இஸ்ரோ வெற்றி பெற்றதன் மூலம், அந்த வித்தையை கற்றுக்கொண்ட உலக நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா வரிசையில் 4வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. டாக்கிங் சோதனையின் மற்ற தரவுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்து வருகின்றனர். இதுபற்றி முழுமையான விவரம் பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜன 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை