திருப்பதி சம்பவம் பற்றி 6 மாதத்தில் அறிக்கை Tirumala Tirupati Temple
திருப்பதி சம்பவம் பற்றி 6 மாதத்தில் அறிக்கை Tirumala Tirupati Temple| Vaikunta Ekadasi Festival accident| Andhra CM action திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 10ம் தேதி பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் சார்பில் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. திருப்பதியில் உள்ள பத்மாவதி பூங்காவில் டோக்கன் வாங்க பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியாகினர். 40 பேர் காயமடைந்தனர். தேவஸ்தானத்தின் அலட்சியமே பக்தர்கள் இறப்புக்கு காரணம் என, எதிர்கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டினார். இந்த சம்பவம் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். இந்நிலையில், ஆந்திராவை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி சத்யநாராயண மூர்த்தி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. டோக்கன் வினியோக ஏற்பாட்டில் ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா என்பது குறித்து இந்த ஆணையம் விசாரிக்கும். அது மட்டுமின்றி எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அரசுக்கு ஆலோசனை வழங்கும். ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடித்து, அரசுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வைத்தகோரிக்கையை முதல்வர் சந்திரபாபு நிராகரித்துள்ளார்.