வேங்கைவயல் வழக்கு விசாரணை வேறு கோர்ட்டுக்கு மாற்றம் | Vengaivyal case | CBCID
வேங்கைவயல் வழக்கு விசாரணை வேறு கோர்ட்டுக்கு மாற்றம் | Vengaivyal case | CBCID | Special court | CBCID chargesheet | புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தில் அதே கிராமத்தை சேர்ந்த காவலர் முரளி ராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டில் ஜனவரி 20ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதை சுட்டிக்காட்டி அதே பகுதியினரே மனித கழிவை கலந்திருப்பதால் வன்கொடுமை சட்ட பிரிவுகளை நீக்கிவிட்டு குற்றவியல் நடுவர் கோர்ட்டுக்கு மாற்றக் கோரி ஜனவரி 27ல் சிபிசிஐடி போலீசார் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். ஆனால், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்பதால் குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது வழக்கின் புகார்தரரான கனகராஜூம் மனு செய்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை பிப்ரவரி 1ல் வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் பதிவுசெய்த நீதிபதி ஜி.எம்.வசந்தி விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்திருந்தார். அதன்படி இன்று வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்று, வழக்கை புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் கோர்ட்டுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என்று வழக்கின் புகார்தாரரான கனகராஜ் கொடுத்த மனுவையும் தள்ளுபடி செய்தார். இனி வரும் காலங்களில் இந்த வழக்கு மாற்றப்பட்டகோர்ட்டில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.