பதிலடிக்கு தகுந்த நேரத்திற்காக காத்திருக்கும் பிரதமர் மோடி | Pahalgam attack | PM Modi | Waiting fo
பதிலடிக்கு தகுந்த நேரத்திற்காக காத்திருக்கும் பிரதமர் மோடி | Pahalgam attack | PM Modi | Waiting for time | Pakistan | ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தயாராகி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக பிரதமர் மோடி ஏதாவது செய்ய வேண்டும் என, மக்களும் எதிர்பார்க்கின்றனர். இந்த தாக்குதல் நடந்தபோது, சவுதி அரேபிய பயணத்தில் இருந்த மோடி, தன் பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு டில்லி திரும்பினார். ஏர்போர்ட்டில் இருந்து லோக் கல்யாண் சாலையில் உள்ள தன் வீட்டிற்கு வந்ததுமே அதிகாரிகள் கூட்டம் இருக்கும் என்பதால், அதிகாரிகள் தயாராக காத்திருந்தனர். ஆனால் டில்லியில் இறங்கியதும், ஏர்போர்ட்டிலேயே ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் மோடி. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, உளவுத்துறை, ரா அமைப்பின் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அதன்பின், அமைச்சரவை கூட்டம் உட்பட பல ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன. இதில், பாகிஸ்தானுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாம். இதற்கிடையே, பாகிஸ்தான் தன் படைகளை இந்திய எல்லை பகுதியில் குவித்து வருகிறது. மோடி உடனடியாக எதையும் செய்ய மாட்டார். தகுந்த நேரத்திற்காக காத்திருப்பார். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், இதன் பின்னால் இருந்தவர்கள் மட்டுமின்றி பாகிஸ்தானுக்கும் நிச்சயம் பெரிய அடி காத்திருக்கிறதுற என்கின்றனர். 2019ல் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடந்த 10 நாளில், இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் பாலகோட் என்ற இடத்தில் இருந்த பயங்கரவாதிகளின் கூடாரத்தை அடித்து நொறுக்கியது. அதேபோல் விரைவில் மோடி ஏதாவது அதிரடியை நடத்துவார் என டில்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.