ராணுவத்திடம் சிக்கிய 2 முக்கிய பயங்கரவாதிகள் | ind vs pak | pahalgam attack | LeT terrorists arrest
ராணுவத்திடம் சிக்கிய 2 முக்கிய பயங்கரவாதிகள் | ind vs pak | pahalgam attack | LeT terrorists arrest ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, மாநிலம் முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. தினமும் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை நடக்கிறது. தாக்குதலுக்கு பிறகு நடந்த என்கவுன்டர்களில் இதுவரை 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் காஷ்மீரின் சோபியான் மாவட்டம் பாஸ்குசான் இமாம்சாஹிப் பகுதியில் உள்ள ஒரு பழத்தோட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே ராணுவம், போலீஸ், சிஆர்பிஎப் படையினர் கூட்டாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மொத்த தோட்டத்தையும் சுற்றி வளைத்தனர். உள்ளே பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவம் தங்களை சுற்றி வளைத்ததை உணர்ந்தனர். இந்த மாதிரி நேரத்தில் வீரர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்துவார்கள். அதற்கு நம் வீரர்களும் பதிலடி கொடுப்பார்கள். இப்படி தான் பயங்கரவாதிகள் என்கவுன்டர் நடக்கும். ஆனால் இந்த முறை பழத்தோட்டத்துக்குள் பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளும் வழக்கத்துக்கு மாறாக ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடைவதாக அறிவித்தனர். இதை தொடர்ந்து அவர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இர்பான் பஷீர், உசைர் சலாம் என்பது தெரியவந்தது. 2 பேருமே பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். பயங்கரவாதிகளிடம் இருந்து 2 ஏகே-56 துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், 2 கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளும் இதே லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் தான். எனவே கைதானவர்களிடம் இருந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பற்றியோ அல்லது தாக்குதல் பற்றியோ வேறு ஏதேனும் தகவல் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரகசிய இடத்தில் வைத்து பயங்கரவாதிகள் 2 பேரிடமும் விசாரணை நடக்கிறது. சோபியானில் தேடுதல் வேட்டையும் தொடர்கிறது.