ராஜதந்திரியாகும் ஆனந்த்: விஜய் காதுக்கு போன புகார் | TVK | Actor Vijay | TVK anand
ராஜதந்திரியாகும் ஆனந்த்: விஜய் காதுக்கு போன புகார் | TVK | Actor Vijay | TVK anand தமிழக வெற்றிக் கழகத்தில் அக்கட்சி தலைவர் விஜய்க்கு அடுத்து அதிகார மையமாக புதுச்சேரி மாநில முன்னாள் எம்.எல்.ஏ ஆனந்த் உள்ளார். விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பே அவரது நம்பிக்கைக்கு உரிய தலைவராக இருந்தவர். இவர் இப்போது த.வெ.க கட்சியின் பொதுச்செயலராக உள்ளார். விஜய் பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் இவரது தலைமையில் தான் நடக்கும். சிங்கிள் மேன் ஆர்மியாக ஆனந்த் செயல்பட்டு வந்த நிலையில் இப்போது அவரது அதிகாரம் சற்று தளர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா, த.வெ.க.,வில் இணைந்து, தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் பதவியை பெற்றுள்ளார். ஆனந்துக்கு இணையாக, கட்சியில் புதிய அதிகார மையமாக, அவர் உருவெடுத்து உள்ளார். விஜய்யுடன் இவரது நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அண்ணாமலை மற்றும் பழனிசாமியை ஒப்பிட்டு ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ சமீபத்தில் வெளியாகி சர்ச்சையானது. மாமல்லபுரம் தனியார் விடுதியில் ஆனந்துடன், ஆதவ் அர்ஜுனா பேசியபடியே நடந்து சென்ற அந்த காட்சிகள் தான் சர்ச்சைக்கு காரணம். இது அ.தி.மு.க மற்றும் த.வெ.க., கூட்டணி பேச்சுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்தது. இது விஜய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆதவ் அர்ஜுனாவை அழைத்து கண்டித்துள்ளார். இதையடுத்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, அவர் அறிக்கை வெளியிட்டார். அத்துடன் இந்த வீடியோவை வெளியிட்டது யார் என, விஜய் விசாரித்துள்ளார். அப்போது அவருக்கு கிடைத்த தகவல், த.வெ.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்சியில் தனக்கு போட்டியாக யாரும் வரக்கூடாது என்பதில், ஆனந்த் உறுதியாக உள்ளார். இதற்காக, பல்வேறு ராஜதந்திர அரசியலை, அவர் முன்னெடுத்து வருகிறார் என்கிறனர் தவெகவினர். தனியார் டிவியில் பணியாற்றும் மூன்று பேர் உதவியுடன், தன்னை விளம்பரப்படுத்த, தனியாக ஐ.டி., விங்கை அவர் உருவாக்கி உள்ளார். இதை வைத்து, விஜய்க்கு இணையாக, தனக்கு விளம்பரங்களை செய்து வருகிறார். அவர்கள் மூலமாக திட்டமிட்டு ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. கட்சியில் ஆதவ் அர்ஜுனா அதிகாரம் செலுத்துவதற்கு, ஆனந்த் மறைமுகமாக தடை போட முயற்சி செய்வது அம்பலமாகி உள்ளது. இதை விஜய் கவனத்திற்கு நிர்வாகிகள் கொண்டு சென்றுள்ளனர். அவரும் ஆனந்திடம் விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.