தொல்லியல் துறை vs தஞ்சை மாநகராட்சி: நடந்தது என்ன? | Brihadisvara Temple | Thanjai Periya Kovil
தொல்லியல் துறை vs தஞ்சை மாநகராட்சி: நடந்தது என்ன? | Brihadisvara Temple | Thanjai Periya Kovil தஞ்சை பெரிய கோயில் பூஜை பணிகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் அறநிலையத்துறை கவனிக்கிறது. கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணி இந்திய தொல்லியல் துறை வசம் உள்ளது. கோயிலின் முன்பகுதியில் உள்ள அகழி மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது அகழியில் சீமை கருவேல மரங்கள் அண்டி புதர் நிரம்பி காணப்படுகிறது. இதனை சுத்தப்படுத்தி நீர் நிரப்ப வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே அகழியை மேம்படுத்த 2022ல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 4 கோடியே 88 லட்சம் ரூபாய் தஞ்சை மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அகழி பராமரிப்பு பணிகளை நாங்களே மேற்கொள்கிறோம் என கேட்டதால் இந்த நிதி தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டது. மூன்று வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அகழியை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்படவில்லை. கடந்த வருடமே சென்னையில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி நிதி குறித்த கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டது. அகழியை மேம்படுத்த தொல்லியல் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை திரும்ப பெற்று குடிசை மாற்று வாரிய பணிக்காக வழங்க வேண்டும் என தஞ்சை மாநகராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 4.88 கோடி நிதியை திரும்ப தருமாறு இந்திய தொல்லியல் துறைக்கு தஞ்சை மாநகராட்சி சார்பில் தற்போது கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தஞ்சை பெரிய கோயில் அகழியை மேம்படுத்த 4 முறை டெண்டர் விடப்பட்டது. ஆனால் டெண்டரை எடுக்க தகுதியானவர்கள் முன் வராததால் அது ரத்து செய்யப்பட்டது. இதனால் தான் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது மாநகராட்சி கேட்டுக்கொண்டதை தொடர்ந்து 4 கோடியே 88 லட்சம் ரூபாய் நிதியை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவித்தனர்.