உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கூட்டணி கட்சிகள் விஷயத்தில் பாஜவினருக்கு அமித்ஷா கண்டிஷன் | Amit shah

கூட்டணி கட்சிகள் விஷயத்தில் பாஜவினருக்கு அமித்ஷா கண்டிஷன் | Amit shah

கூட்டணி கட்சிகள் விஷயத்தில் பாஜவினருக்கு அமித்ஷா கண்டிஷன் | Amit shah | Union minister | BJP | Advice to party members | TN BJP | சமீபத்தில் மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் மையக்குழு கூட்டத்தை கூட்டினார். அதில், அமித் ஷா பேசியதாக கூறப்படுவதாவது, தமிழகத்தை பொறுத்தவரை, பா.ஜவுக்கு அரசியல் ரீதியில் முக்கியத்துவம் இல்லாத நிலை இருந்து வருகிறது. திராவிட இயக்கங்களை போல, கட்சியை அடிமட்ட அளவில் கொண்டு செல்லாததே அதற்கு முக்கிய காரணம். மத்தியில் நம் ஆட்சி தான் நடக்கிறது. 11 ஆண்டுகளில் பாஜ செயல்படுத்திய மக்கள் நல திட்டங்கள் பற்றிய விபரம் மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை. அதையெல்லாம் நாம் தான் செய்திருக்கிறோம் என்ற தகவலும் போய் சேரவில்லை. அந்த பணிகளை முழுமையாக செய்தாலே, மக்களுக்கு பா.ஜ மீது தனி ஈர்ப்பு வரும். சிலருக்கு கட்சியின் மீதும், தலைமை மீதும் அதிருப்தி இருப்பதாக சொல்கின்றனர். எல்லாரையும், எல்லா நேரங்களிலும் திருப்திபடுத்த முடியாது. அதற்காக, இனி நான் அமைதியாக இருக்கப் போகிறேன் என்று சொல்லி, அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கினால், சம்பந்தப்பட்ட தனி நபருக்குத்தான் பாதிப்பு; கட்சிக்கு அல்ல. கட்சிக்காக உழைப்பவர்களுக்கு பதவி, மரியாதை எல்லாம் தேடி வரும். எந்தவொரு விஷயமும் யாருக்கும் தெரியாது என நினைத்து, யாரும் செயல்படக்கூடாது. டில்லிக்கு எல்லா தகவல்களும் வந்துகொண்டே தான் இருக்கின்றன. அதனால்தான், சில விஷயங்களில் மேலிடத்தில் இருந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும்போது, கீழே இருப்பவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களின் கூட்டு முயற்சியால் வளர்ந்துள்ள இயக்கம் தான் பா.ஜ., அதனால் தனிமனித போற்றுதலுக்கு இங்கு வாய்ப்பே இல்லை. கட்சி இன்னும் பல வளர்ச்சிகளை பார்க்க வேண்டும். அதற்கு ஒவ்வொருவரின் உழைப்பும் அவசியம். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் என்பது போல, கட்சியில் பதவி, முக்கியத்துவம் எல்லாமே கிடைக்கும். தமிழகத்தை பொறுத்தவரை வலுவான கூட்டணியை கட்டமைத்தால் தான், திமுகவை வீழ்த்த முடியும். அதற்கு கூட்டணியில் மேலும் பல கட்சிகளை சேர்க்க வேண்டும். கூட்டணி கட்சிகளோடு ஒருநாளும் முரண்கள் வரக்கூடாது. இணக்கமாக களப்பணியாற்ற வேண்டும். அதிமுகவோடு கூட்டணி அமைத்திருக்கிறோம். அக்கட்சியிடம் இருந்து, நாம் வெல்லக்கூடிய தொகுதிகளாக பார்த்து பெற வேண்டும். ஓட்டு வங்கி உயர்ந்து விட்டது என்ற காரணத்தை சொல்லி, கடுமையான தொகுதிகளை கேட்டுப் பெற்று, தோல்வி அடைய கூடாது. நம்மை பொறுத்தவரை, வெற்றி ஒன்றுதான் ஒரே இலக்கு. கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில் செய்யத் தவறிய அனைத்து வாக்குறுதிகளையும் கணக்கெடுங்கள்; அதை மக்களிடம் கொண்டு சென்று பூதாகரமாக்குங்கள். யாருக்காகவும், எந்த சூழ்நிலையிலும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பயமின்றி பணியாற்ற வேண்டும். உங்களுக்காக நான் இருக்கிறேன். எப்போது கூப்பிட்டாலும், எத்தனை முறை கூப்பிட்டாலும் தமிழகத்துக்கு ஓடோடி வருவேன். 2026ல் பா.ஜ கூட்டணி ஆட்சிக்கு வருவதற்காக, எப்படி வேண்டுமானாலும் உதவ தயாராக இருக்கிறேன் என்றும் அமித் ஷா பேசியதாக கூறப்படுகிறது.

ஜூன் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை