பாமகவுக்கு பாஜ கொடுத்த ஆப்சன்: முடிவு யார் கையில்? | PMK | BJP | Ramadoss
பாமகவுக்கு பாஜ கொடுத்த ஆப்சன்: முடிவு யார் கையில்? | PMK | BJP | Ramadoss மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வருவதற்கு முன்பே தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நடந்தது. பாஜ-பா.ம.க., கூட்டணியை உறுதி செய்ய திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை, ஆடிட்டர் குருமூர்த்தியும், முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் சந்தித்து பேசினர். தொடர்ந்து சென்னையிலும் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, ராமதாசிடம் குருமூர்த்தி சில ஆப்சன்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ., - பா.ம.க., கூட்டணி ஏற்பட்டிருந்தால், 25 தொகுதிகள் வரை வெற்றி பெற்றிருக்க முடியும். சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியை வீழ்த்த, இந்த கூட்டணி அவசியம். பாமகவில் நடக்கும் உட்கட்சி மோதல்கூட்டணி வெற்றியை பாதிக்கும். எனவே அன்புமணியிடம் சமரசமாகி, கூட்டணியை பலப்படுத்த வேண்டும். சட்டசபை தேர்தலில், குறைந்தபட்சம் 15, அதிகபட்சமாக 20 தொகுதிகள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. கூட்டணி ஆட்சிதான், தமிழகத்தில் ஏற்படுத்தப்படும் என, அமித் ஷா உறுதி செய்துள்ளார். பாஜ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் புதிய அமைச்சரவையில், 5 எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படும். அதற்கு அமித் ஷா உறுதுணையாக இருப்பார். எனவே கூட்டணி முடிவை, நீங்கள் அறிவிக்க வேண்டும் என குருமூர்த்தி சொன்னதாக தெரிகிறது. அதே நேரம் ராமதாஸ் தரப்பில் இருந்தும் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. வட மாவட்டங்களில், 100 தொகுதிகளில், தி.மு.க.,வுக்கு நாங்கள்தான் சிம்ம சொப்பனமாக இருக்கிறோம். அதனால் 35 முதல் 40 தொகுதிகளில் நாங்கள் போட்டியிட்டாக வேண்டும். மேலும் ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் மத்திய இணை அமைச்சர் பதவியும் வழங்க வேண்டும். இதற்கு ஒப்புக் கொண்டு தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டும். சம்மதமா என கேட்டு சொல்லுங்கள்; அப்புறம் முடிவை சொல்கிறேன் என ராமதாஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.