உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீட்டில் 20 கோடியை தேடி வந்த கொள்ளை கும்பல்

வீட்டில் 20 கோடியை தேடி வந்த கொள்ளை கும்பல்

வீட்டில் 20 கோடியை தேடி வந்த கொள்ளை கும்பல் திண்டுக்கல், நத்தம் அருகே சமுத்திரப்பட்டியை சேர்ந்தவர் அழகப்பன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரும், 75 வயதான தாய் சொர்ணமும் ஒன்றாக வசித்து வருகின்றனர். நேற்றிரவு இவர்களது வீட்டின் பின்புறம் வழியாக முகமூடி கொள்ளையர்கள் 6 பேர் நுழைந்துள்ளனர். வெளியில் சென்றிருந்த அழகப்பன் வீட்டுக்கு வந்தபோது, அவரை கொள்ளையர்கள் மடக்கி பிடித்து கத்தியை காட்டி மிரட்டினர். உன் வீட்டில் 20 கோடி ரூபாய் பணம் இருப்பது தெரிந்துதான் வந்து இருக்கிறோம். அந்த பணத்தை கொடுத்தால்தான் உயிரோடு விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். அப்படி எந்த பணமும் இல்லை; விட்டுவிடுங்கள் என அழகப்பன் கெஞ்சியும் கொள்ளையர்கள் விடவில்லை. அவரை வீட்டுக்குள் இழுத்து சென்று அனைத்து அறைகளிலும் பணத்தை தேடினர். மாடியில் இருந்த அழகப்பனின் தாய் காப்பாற்றுங்கள்; காப்பாற்றுங்கள் என்று கத்தினார். கொள்ளையர்கள் சொர்ணத்தை கீழே இழுத்து வந்தனர். இதனிடையே அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு ஓடி வந்தனர். உடனே கொள்ளையர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். பொதுமக்கள் விரட்டி பிடிக்க முயன்றனர். அவர்களில் ஒருவன் மட்டும் சிக்கினான். தர்ம அடி கொடுத்தனர். அவன் மதுரை, மேலூர் அருகே கொட்டக்கடியை சேர்ந்த பிரபாகரன் என்பது தெரிந்தது. 2 போலீசார் வந்தனர். பிடிபட்ட கொள்ளையனை அடிக்க கூடாது என்று மக்களை அதட்டிய அவர்கள், இனி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் எனக்கூறி கொள்ளையனை அழைத்து செல்ல முயன்றனர். ஆனால், போலீசாரின் அஜாக்கிரதையால், கொள்ளையன் அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டான். அவனை போலீசார் தேடுகின்றனர். கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த அழகப்பன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஜூன் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை