கருணாநிதி பிறந்த நாளில் இன்பநிதிக்கு வந்த பதவி | Inbanithi | Stalin | DMK
கருணாநிதி பிறந்த நாளில் இன்பநிதிக்கு வந்த பதவி | Inbanithi | Stalin | DMK திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவுக்கு அவரது மகன் ஸ்டாலின் அந்த பொறுப்பை ஏற்றார். 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்று முதல்வரானார். அவரது மகன் உதயநிதியும் 2018 வரை சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். அதன் பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டார். உடனே திமுக இளையரணி தலைவர் ஆனார். 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். அப்போதே அவருக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைவார்கள் என பொறுமை காக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி வரிசையில் இப்போது நான்காவது தலைமுறையை உள்ளே கொண்டு வரும் முயற்சிகள் மிக தீவிரமாக நடக்கிறது. உதயநிதி மகன் இன்பநிதியை மெல்ல மெல்ல மெருகேற்றி கட்சி பணிகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சேலத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில் திமுகவின் உதய சூரியன் சின்னம் பொறித்த சட்டை அணிந்து கலந்துகொண்டார். பொங்கல் விழாவின் போது ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றபோதும் அதே உடையை அணிந்திருந்தார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை உதயநிதியுடன் இணைந்து கண்டு களித்தார். அப்போது அவருக்கு அமைச்சர்களுக்கு இணையான மரியாதை அளிக்கப்பட்டது. ஆனால், இன்பநிதி இதுவரை நேரடி அரசியலில் இறங்கவில்லை. இந்த நிலையில் இப்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் இயங்கும் கலைஞர் டீவியின் நிர்வாகப் பிரிவில் இன்பநிதி பணிபுரிய தொடங்கி உள்ளார். கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி முதல் அவர் கலைஞர் டீவியில் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. இன்பநிதி லண்டனில் நிதி நிர்வாகம் தொடர்பான பட்ட படிப்பை முடித்துள்ளார். அதனால் நிர்வாக பொறுப்பு தொடர்பான பணிகளை கவனித்து வருவதாக தெரிகிறது. சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து தினமும் காலை 11 மணிக்கு அலுவலகம் வரும் இன்பநிதி, மாலை 5:30 மணி வரை பணி புரிவதாக திமுகவினர் சொல்கின்றனர். கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஊடக பணியில் ஈடுபடுவது வழக்கம் தான் எனப்படுகிறது. ஏற்கனவே ஸ்டாலின் முரசொலி அலுவலகத்தில் பணியாற்றி உள்ளார். அடுத்து உதயநிதி முரசொலியின் நிர்வாக இயக்குனர் ஆனார். அதே பாணியில் இன்பநிதிக்கும் கலைஞர் டீவியில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.