சீனாவின் புதிய உளவு ஆயுதம் Cyborg: அதிர்ச்சி பின்னணி | cybernetic | organism
சீனாவின் புதிய உளவு ஆயுதம் Cyborg: அதிர்ச்சி பின்னணி | cybernetic | organism உயிரினங்களை கருவிகள் மூலமாக கட்டுப்படுத்தும் Cyborg என்ற தொழில்நுட்பம் குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இந்தியா-பாகிஸ்தான், ரஷ்யா-உக்ரைன் போரின் போது ட்ரான் டெக்னாலாஜி எப்படி பெரிதாக பேசப்பட்டதோ அதே போல எதிர்காலத்தில் Cyborg தொழில்நுட்பம் இருக்கும். Cyborg என்றால் சைபர்நெட்டிக் (cybernetic) மற்றும் ஆர்கனிசம் (organism) என்கிற இரண்டு வார்த்தைகள் இணைந்து உருவான சொல்லாகும். ஒரு உயிரினத்தின் உடல் பாகங்களில் செயற்கை பாகங்கள், எலக்ட்ரானிக் கருவிகளை இணைத்து அதன் திறனை மேம்படுத்துவது இதன் சிறப்பம்சம். உதாரணத்துக்கு சொன்னால், ஹாலிவுட் படங்களில் கை கவசம் அணிந்தால் அதீத சக்தி வருவது, செயற்கை ஆடை அணிந்தால் மனிதன் பல மடங்கு உயரம் பறப்பது மாதிரியானது. மனிதர்களின் இந்த சோதனை பெரிய அளவில் நடத்தப்படவில்லை என்றாலும், ஒரு சில நாடுகள் மற்ற உயிரினங்கள் மீது இந்தன் தொழில்நுட்பத்தை சோதித்து வருகின்றன. அந்த வகையில், தேனீயின் மூளையை கட்டுப்படுத்தி, நம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் முயற்சியில், சீனாவைச் சேர்ந்த பீஜிங் தொழில்நுட்ப மையத்தின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, 74 மில்லி கிராம் எடையுள்ள சிறிய கருவியை உருவாக்கியுள்ளனர். இதில் உள்ள சிறிய ஊசிகள், தேனீயின் மூளையைக் கட்டுப்படுத்தும். எந்த இடத்தில் இருந்தும், தேனீயின் இயக்கத்தை கண்காணிக்க முடியும். நம் உத்தரவுகளுக்கு ஏற்ப, அதன் இயக்கத்தையும் மாற்ற முடியும். இதுவரை நடந்துள்ள ஆய்வுகளில், விஞ்ஞானிகளின் உத்தரவுகளில், 90 சதவீதத்தை தேனீக்கள் நிறைவேற்றி உள்ளன. பேரிடர் காலங்கள், பயங்கரவாத தாக்குதல்களின்போது, மனிதர்கள் உடனடியாக செல்ல முடியாத இடங்களுக்கு இதுபோன்ற தேனீக்களை அனுப்பலாம். அங்குள்ள நிலவரத்தை தெரிந்து கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் சொல்கின்றனர். இதற்கு முன் சிங்கப்பூரைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இதுபோன்ற மிகவும் எடை குறைந்த கருவியை உருவாக்கி இருந்தனர். தற்போது சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளது, அதைவிட, மூன்றில் ஒரு பங்கு எடை மட்டுமே கொண்டது. இருப்பினும் இந்த கருவி, தொடர்ந்து செயல்படுவதற்கு மின்சார வசதி தேவை. அதனால், கருவியுடன் பேட்டரியை இணைப்பது தொடர்பாக, தொடர் ஆய்வுகள் நடந்து வருகின்றன. எதிர்காலத்தில், ராணுவ உளவுப் பணிகளுக்கும் இதுபோன்ற தேனீக்களை பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.