யானையுடன் சேர்த்து தவெக கொடி கலருக்கும் சிக்கல் | TVK | TVK Flag | TVK Flag Case
யானையுடன் சேர்த்து தவெக கொடி கலருக்கும் சிக்கல் | TVK | TVK Flag | TVK Flag Case நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி கொடி சிவப்பு, மஞ்சள் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவில் இரண்டு யானைகளும், வாகை மலரும் இடம்பெற்று உள்ளது. ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் யானை சின்னம் இருப்பதால் இது சர்ச்சையானது. தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என தமிழக பகுஜன் சமாஜ் கட்சி பொதுச்செயலாளர் அன்பன் சென்னை சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரையில் தவெகவினர் யானை சின்னத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என இன்னொரு இடையீட்டு மனுவும் தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூலை 11ம் தேதி நீதிபதி சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கில் ஏற்கெனவே இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தாா். அப்போது, பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் வக்கீல் ஆனந்தன் ஆஜரானார். தங்களது தரப்பில் மேலும் வாதிட வேண்டியுள்ளதால், இடைக்கால உத்தரவை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். இந்த வழக்கில் இடைக்கால உத்தரவை ஒத்திவைக்க நீதிபதி மறுப்பு தெரிவித்தாா். இதையடுத்து, தங்களது இடைக்கால மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் தவெகவினர் யானை சின்னத்தை கொடியில் பயன்படுத்த இருந்த சட்ட சிக்கல் தற்காலிகமாக நீங்கியது. இந்த நிலையில் மீண்டும் அதிர்ச்சியளிக்கும் விதமாக தவெக கட்சி கொடியின் சிவப்பு, மஞ்சள் நிறத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பின் தலைவர் பச்சையப்பன் இது தொடர்பாக மனுதாக்கல் செய்துள்ளளார். அதில், சிவப்பு, மஞ்சள் நிற கொடியை நாங்கள் பதிவு செய்துள்ளோம். எங்கள் சபை அதிகாரிகள், ஊழியர்கள், முகவர்கள்,ஊழியர்கள் மட்டுமே அதனை பயன்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது. தவெக கொடியில் வாகை மலரை தவிர, அதில் உள்ள மற்ற அத்தனை அம்சங்களுக்கும் எதிராக வழக்கு தொடரப்பட்டிருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.