டோல் ஒப்பந்த நிறுவனம் மீது NHAI அதிரடி நடவடிக்கை
டோல் ஒப்பந்த நிறுவனம் மீது NHAI அதிரடி நடவடிக்கை உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் கபில் கவாட். சொந்த கிராமத்திற்கு சமீபத்தில் வந்திருந்தார். விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் இரவு ஜம்மு காஷ்மீருக்கு புறப்பட்டார். அதற்காக டெல்லி ஏர்போர்ட்டுக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். மீரட்-கர்னல் நெடுஞ்சாலையில் உள்ள புனி டோல்கேட்டில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. விமானத்துக்கு தாமதம் ஆகிவிடும் எனக்கருதிய கபில் கவாட், தமது ராணுவ அடையாள அட்டையை காண்பித்து, செல்ல அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். டோல்கேட் ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அப்போது டோல்கேட் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து, கபில் கவாட்டையும் கண்மூடித்தனமாக தாக்கினர். கம்பத்தில் கட்டி வைத்து உருட்டு கட்டையால் அடித்தனர். டோல்கேட் ஊழியர்களை கண்டித்து உள்ளூர் மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது ஊழியர்களுடன் மோதல் ஏற்பட்டது. டோல்கேட் அடித்து நொறுக்கப்பட்டது. போலீசார் நிலைமையை கட்டுப்படுத்தினர். டோல்கேட் மூடப்பட்டது. ராணுவ வீரரை தாக்கியதாக டோல்கேட் ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில், புனி டோல்கேட்டை நிர்வகிக்கும் நிறுவனத்துக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. எதிர்காலத்தில், சுங்கச்சாவடி ஏலத்தில் பங்கேற்கவும் அந்த நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.