மல்லை சத்யாவுக்கு கடைசி சான்ஸ்: வைகோ அறிவிப்பு Vaiko-Mallai Sathya Clash | MDMK | Suspension |
மல்லை சத்யாவுக்கு கடைசி சான்ஸ்: வைகோ அறிவிப்பு Vaiko-Mallai Sathya Clash | MDMK | Suspension | மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் மல்லை சத்யா. அக்கட்சியின் துணை பொது செயலாளராக செயல்பட்டு வந்தார். கட்சியின் பொது செயலாளர் வைகோ மகன் துரை வைகோ கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்புக்கு வந்த பிறகு, இருவருக்கும் பனிப்போர் தொடங்கியது. இருவருக்குமான கருத்து மோதல்களை வைகோ அவ்வப்போது சமரசம் செய்துவைத்தார். ஒரு கட்டத்தில் இருவரிடையே மோதல் உச்சத்தை தொட்டது. ஆனால், அப்போதும் வைகோவின் தலையீட்டால், ஒரே மேடையில் மல்லை சத்யாவும், துரையும் கைகுலுக்கி சமாதானம் அடைந்தனர். இதற்கு பிறகும் வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கும் பிரச்னை வெடித்தது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததைப் போல மல்லை சத்யா எனக்கு துரோகம் செய்துவிட்டார் என வைகோ பொதுவெளியில் குற்றம் சாட்டினார். மகன் மீதான பாசத்தால் வைகோ தன் மீது அபாண்டமாக குற்றும் சுமத்துகிறார். துரோகி பட்டத்துக்கு பதிலாக விஷம் கொடுத்திருந்தால் அதை குடித்துவிட்டு இறந்திருப்பேன் என மல்லை சத்யா கூறினார். வைகோவிடம் நீதி கேட்டு சென்னையில் ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார். இருவருக்குமான உரசல் அதிகமான நிலையில் கட்சி கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு வராமல் தவிர்த்தார், மல்லை சத்யா. இந்நிலையில், அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக வைகோ அறிவித்துள்ளார். மல்லை சத்யா கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். கட்சி சட்ட திட்டங்களுக்கு எதிராக அவர் செயல்பட்டது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவெடுத்து இருக்கிறேன். அதன்படி மல்லை சத்யா மதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியின் சொத்துகளை அவர் ஒப்படைக்க வேண்டும். ஒழுங்கு நடவடிக்கையை கைவிடக் கோரி அவர் 15 தினங்களுக்குள் கட்சித் தலைமைக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கலாம் என வைகோ தெரிவித்துள்ளார்.