இந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு! | NITI Aayog | M.K.Stalin | PM Modi | Delhi |
மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக 2015ம் ஆண்டு நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு பின், ஒவ்வொரு ஆண்டும் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் நடப்பது வழக்கம். இதில், அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்க அழைப்பு அனுப்பப்படும். மாநில திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு குறித்து, இந்த கூட்டத்தில் முதல்வர்கள் எடுத்துரைப்பர். கடந்த ஆண்டு ஜூலையில் டெல்லியில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, இமாசல பிரதேசம், கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள், டெல்லி, புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் அந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான நிடி ஆயோக் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் வரும் 24ம் தேதி டில்லியில் நடக்கவுள்ளது. இதில், பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டில்லி செல்கிறார். அப்போது, பிரதமரை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளார்.