வெள்ளத்தில் மிதக்கும் வடசென்னை Chennai Flood| North Chennai flood| Chennai rain|
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களாக பெய்த கனமழையால் மாநகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கின்றன. பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வடிந்தாலும், வட சென்னையின் பல இடங்களில் நிலைமை மோசமாகவே உள்ளது. மழை நின்றாலும், ஏற்கனவே பெய்த மழையால் தேங்கிய நீர் வடிய வழியின்றி குளம் போல் காட்சி அளிக்கிறது. வட சென்னையின் முக்கிய பகுதியான ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட சத்யா நகர், எழில் நகர், எம்ஜிஆர் நகர் உட்பட பெரும்பாலான தெருக்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் வடியாததுடன், கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் முழங்கால் அளவு கழிவுநீரில் நெடுந்துாரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்ததால், தினசரி வாழ்க்கையே பெரும் சிரமமாக மாறியுள்ளது. பெரும்பாலான இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இரவு நேர துாக்கத்தை தொலைத்துள்ளனர்.