ஒரு நாடு ஒரே தேர்தல் குறித்து நாடு முழுதும் கருத்து கேட்பு One Nation One Election JPC Meeting | ONO
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் கீழ் நாடு முழுதும் லோக்சபா, சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேர்தல் செலவினங்களை குறைக்கவும், பல்வேறு காலகட்டங்களில் நடத்தப்படும் தேர்தல்களால் ஏற்படும் நிர்வாக சிரமங்களை தவிர்க்கவும் இந்த முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து பிரத்யேக அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. ஒரு நாடு ஒரே தேர்தல் நடைமுறையை அமல்படுத்த வேண்டுமானால் அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இதற்காக பார்லிமென்ட்டின் இரு சபைகளிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசின் இந்த முயற்சியை காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. இதனால் இந்த மசோதா பார்லிமென்ட் கூட்டு குழு விவாதத்திற்கு விடப்பட்டது. கூட்டுக்குழுவின் தலைவராக பாஜ எம்பி பிபி சவுத்ரி நியமிக்கப்பட்டார். இந்த குழுவில் பல்வேறு எதிர்க்கட்சி எம்பிக்களும் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் உறுப்பினர்கள் ஆலோசித்து, மசோதாவில் உள்ள நிறை குறைகள் பற்றிய ஒரு முடிவுக்கு வருவர். மசோதா பற்றிய உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, அதில் திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தால் அவற்றை செய்து விரிவான அறிக்கையை கூட்டுக்குழு சமர்ப்பிக்கும். பின் திருத்தப்பட்ட மசோதா பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பினர்களின் விவாதத்திற்கு பின் ஓட்டெடுப்பு நடத்தி நிறைவேற்றப்படும். அதன் பிறகு, அந்த மசோசா ஜனாபதியின் ஒப்புதலுக்கு பின் சட்ட வடிவம் பெறும். இந்த நடைமுறைக்கு பின், மாநில சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் உரிய பணிகளை செய்யும். இந்நிலையில் ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்த பார்லிமென்ட் கூட்டுக் குழு கூட்டம் அதன் தலைவர் சவுத்ரி தலைமையில் இன்று நடந்தது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து ஜேபிசி தலைவர் சவுத்ரி கூறியதாவது: ஒரு நாடு ஒரே தேர்தல் குறித்து அனைத்து மாநிலங்களிலும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும். முதலாவதாக மே 17, 18ம் தேதி மகாராஷ்டிராவில் இருந்து கருத்து கேட்பு துவங்கும். அதைத் தொடர்ந்து உத்தராகண்ட், ஜம்மு - காஷ்மீர், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் நடத்தப்படும். இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணையதளத்தில் அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த மசோதா குறித்து நாட்டு மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து மொழிகளிலும் விளம்பரங்கள் வெளியிடப்படும். விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்த செயல்பாடுகள் மிகவும் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என உறுப்பினர்கள் கூறினர். அதை அனைவரும் ஏற்றுக்கொண்டோம். விரைவில் இதற்கான பணிகள் துவங்கும் என அவர் கூறினார். ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மாற்றத்தை ஏற்படுத்தும், தொலைநோக்கு பார்வை கொண்ட, வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பாஜ எம்.பி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். நாட்டில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தினால், நேரம், பணம் மிச்சமாகும். தேர்தல் நடத்தை விதிகளும் குறுகிய காலத்திற்கு மட்டுமே அமலில் இருக்கும். நாட்டிற்கு நன்மை என்றும் அவர் கூறினார்.